
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், இந்தியாவிலும் ரசிகர்களை வைத்துள்ளார். கோரோனா காலகட்டத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா பட வசனம் பேசி மற்றும் படத்தில் இடம்பெற்ற ‘ஸ்ரீ வள்ளி’ பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் செய்து வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இந்திய ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நிறைய இடங்களில் புஷ்பா படத்தில் இடம்பெறும் அல்லு அர்ஜுன் ஸ்டைலை செய்து மகிழ்ந்து வந்தார்.
கடந்த வருடம் இவர் ஒரு படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் கசிந்தது. இது புஷ்பா 2 பட காட்சி என்றும் இதன் மூலம் அவர் தெலுங்கு சினிமாவில் நடிக்கவுள்ளார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் புஷ்பா 2 படம் கடந்த டிசம்பரில் வெளியான நிலையில் அதில் அவர் நடிக்கவில்லை. இந்த நிலையில் டேவிட் வார்னர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாவதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் ரவி சங்கர் தெரிவித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வருகிற 7ஆம் தேதி வெளியாகவுள்ள‘கிங்ஸ்டன்’ படத்தின் தெலுங்கு பதிப்பு புரொமோஷன் நிகழ்ச்சி ஹைதரபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ரவி சங்கர் படம் குறித்து பேசினார். பின்பு அவரிடம், அவர் தயாரிப்பில் அடுத்து வெளியாகவுள்ள ‘ராபின்ஹுட்’ பட அப்டேட் வேண்டும் என நிகழ்ச்சி தொகுப்பாளினி கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், “ராபின்ஹுட் படத்தில் ஒருவர் சிறப்பு தோற்றத்தில் வருகிறார். ஆனால் அதை நான் வெளியில் சொல்லலாமா எனத் தெரியவில்லை” என்றார். அப்போது மேடைக்கு கீழ் அமர்ந்திருந்த ராபின்ஹுட் பட நாயகன் நிதின் சொல்லுமாறு சைகை செய்தார்.
பின்பு பேசிய தயாரிப்பாளர், “டேவிட் வார்னர் கேமியோ ரோலில் நடித்துள்ளார். மன்னிக்கவும், வெங்கி(ராபின்ஹுட் இயக்குநர்). அவர்கள் வற்புறுத்தியதால் உங்கள் அனுமதியின்றி நான் சொல்ல வேண்டியதாயிற்று. இந்திய சினிமாவில், ராபின்ஹுட் மூலம் வார்னரை அறிமுகப்படுத்துவதில் நான் பெருமைப்படுகிறேன்” என்றார். ராபின்ஹுட் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.