தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான எம். கிருஷ்ணசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழக மக்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் திருவுருவப் படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் திறக்கப்படும் என்ற செய்தி கேட்டு உள்ளம் மகிழ்ந்தேன். எத்தனையோ தலைவர்களுக்கு பெருமை சேர்த்தவர் கலைஞர். சென்னை கடற்கரையில் ஒவ்வொரு வரலாற்று தலைவர்களுக்கும் தனித்தனியாக சிலை அமைத்து அவர்களின் வரலாற்றை அறிய செய்தார். வான்புகழ் போற்றும் திருவள்ளுவர்க்கு கோட்டம் அமைத்தார். கன்னியாகுமரியில் கடல்நடுவில் ஆளுயர சிலை அமைத்து, குறளோவியம் படைத்தவர். நமது கலைஞர் அவர்கள் ‘நெஞ்சுக்கு நீதி’ எழுதினார், திரைப்படம் மூலம் பல்வேறு புரட்சிகரமான கருத்துக்களை உருவாக்கி இரண்டு மாபெரும் நடிகர்களை வெளியுலகத்திற்கு கொண்டுவந்ததின் மூலம் தனது தனித்திறமையை வெளிப்படுத்தினார்.
சட்டமன்றத்தில் வரலாற்று தலைவர்களுக்கு படம் இருக்கிறது என்றால், அதற்கு வித்திட்டவர் கலைஞர். அந்த வரிசையில் அவரது திருவுருவப் படமும் இந்திய குடியரசுத் தலைவரால் திறக்கப்படுகிறது. கலைஞர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து தன்னுடைய மதி நுட்பத்தால் இந்திய தலைவர்களில் முதன்மையானவர்களில் ஒருவராக, மூத்த தலைவராக திகழ்ந்தார். இந்திய திருநாட்டில் எத்தனையோ பிரதமர்கள், குடியரசு தலைவர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர் கலைஞர். 1980ஆம் ஆண்டு சென்னை கடற்கரையில் மாபெரும் கூட்டத்தில் 'நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக' என்று அழைத்து, அன்னை இந்திராகாந்தியை தேர்தலில் வெற்றிகொண்டார். அதேபோன்று 'இந்திராவின் மருமகளே வருக, இந்தியாவில் நிலையான ஆட்சி தருக' என்று சோனியா காந்தியை கூறி காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைய துணை நின்றவர் கலைஞர்.
இந்திய வரலாற்றில் முதன்முதலாக ஒரு பெண் பிரதிநிதி பிரதிபா பாட்டீல் குடியரசு தலைவராக வந்தார் என்றால் அதற்கு முழுமுதல் காரணம் கலைஞர். பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை ‘கல்வி வளர்ச்சி நாளாக’ அறிவித்து மாணவர்களுக்கு என்றும் அவரது வரலாற்று நினைவுகளை போற்றும் வகையில் செய்தவர் கலைஞர். பெண்களுக்கு சொத்தில் சமபங்கும் பெண்களுக்கு உள்ளாட்சியில் 33 சதவீத இடஒதுக்கீடு கொண்டுவந்து செயலாக்கி இந்தியாவையே திரும்பிப் பார்க்க செய்தவர்தான் நமது கலைஞர். மனிதனே மனிதனை கை ரிக்க்ஷாவில் இழுத்து செல்வதை ஒழித்தார். முதியோர் ஓய்வு இல்லம், அவர்களுக்கு இலவச கண் கண்ணாடி, பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு திட்டம், குடிசையை ஒழித்து ‘குடிசை மாற்று வாரியம்’ அமைத்து ஏழைகளையும் மாடி வீட்டில் அமர்த்தினார். இப்படிப்பட்ட புரட்சிகரமான திட்டங்களை கொண்டுவந்ததில் கலைஞருக்கு நிகர் கலைஞர்தான். மாநில உரிமைகளை கட்டி காத்தவர். சமதர்ம சமூகநீதி ஆட்சியை நிலைநாட்டியவர்.
சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்களே கொடியேற்றும் உரிமையை பெற்றுக் கொடுத்து வரலாற்று சாதனை புரிந்தார். ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலராக திகழ்ந்தார். இந்தியாவிலேயே பிற்படுத்தப்பட்டோருக்கு என்று தமிழகத்தில் முதன்முதலாக தனி அமைச்சகம் அமைத்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கி அவர்கள் வாழ்வில் ஒளியேற்றியவர். நாட்டிலேயே விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி விவசாயிகளின் தோழனாக திகழ்ந்தார். உழவர் சந்தை, பெரியார் சமத்துவபுரம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை கொண்டுவந்து ஏழை - எளிய பாட்டாளி மக்களின் ஒளிவிளக்காக திகழ்ந்தவர் நமது கலைஞர். தமிழக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுக்கொடுத்தார். பாலங்கள் என்றால் இன்றளவும் ஞாபகம் வருவது கலைஞர்தான். தனியார் பேருந்து போக்குவரத்தை அரசுடமையாக்கினார். இப்படி அவர் செய்த திட்டங்கள், சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம். அதற்கு நாட்கள் போதாது, எழுதிக்கொண்டே போகலாம் .
2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் என்னை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக அன்னை சோனியா காந்தி நியமித்தார். சட்டமன்ற தேர்தலில் கலைஞர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டணி தலைவராகயிருந்த அவரோடு இணைந்து பணியாற்றிய நினைவுகளை எந்நாளும் நினைத்து பெருமைப்படுகிறேன். திருத்தணி எல்லை போராட்ட வீரர் எனது மாமானார் திருத்தணி கே. விநாயகம் மீது எப்படி பற்றும் பாசமும் கலைஞர் வைத்தாரோ அதே அளவுக்கு என்மீதும் அன்பு கொண்டிருந்தார். என் மகன் M.K விஷ்ணுபிரசாத் MBBS சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும் அன்பை காட்டினார். மூன்று தலைமுறை மட்டுமல்ல நான்கு தலைமுறை அரசியல்வாதிகளை கண்ட ஒரே முதலமைச்சர் கலைஞராக மட்டும்தான் இருக்க முடியும். நான் தலைவராகயிருந்தபோது ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழாவிற்கு சத்தியமூர்த்தி பவனுக்கு அழைத்தேன், வந்தார்.
நான், பழைய மகாபலிபுரம் சாலைக்கு ராஜீவ் காந்தி பெயரை சூட்ட வேண்டும் என்று கோரிக்கையை வைத்தேன். மேடையிலேயே முதலமைச்சர் என் கோரிக்கையை ஏற்று ராஜீவ் காந்தி சாலை என்று அறிவித்தார். அது என்றும் வரலாறு பேசும். மேலும், சென்னை அரசு பொது மருத்துவமனைக்கும் ராஜீவ் காந்தி திருப்பெயரை சூட்டி பெருமைப்படுத்தினார் கலைஞர். அன்னை சோனியா காந்தியை தனது மகள் போல அன்பு செலுத்தினார். பேரறிஞர் அண்ணா காட்டிய கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காத்து, ஏற்றுக்கொண்ட கொள்கைக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டு அண்ணா துயில்கொண்டிருக்கும் அருகிலேயே கலைஞரும் துயில்கொண்டுயுள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்தான் கலைஞர். அவருடைய திருவுருவப் படம் தமிழக சட்டமன்றத்தில் திறப்பதின் மூலம் தமிழக சட்டமன்றம் மேலும் பெருமையடைகிறது.
கலைஞர் திராவிடத்தின் மீது மிகுந்த பற்றுகொண்டவராக இருந்தாலும், அவர் தேசியத்தின் மீதும் பொதுவுடைமை கொள்கையிலும் பிடிப்புகொண்டவர். தமிழகம் இன்றைக்கு வளர்ந்திருக்கிறது என்றால் அதில் கலைஞரின் பங்கு அளவிட முடியாதது. தமிழுக்காகவே வாழ்ந்த கலைஞர் பிறந்தநாளை ‘தமிழ்செம்மொழி நாளாக’ அறிவிக்க வேண்டும். உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று அனைவரும் பாராட்டும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொள்கிறேன்.