கரூர் எம்.பி. தொகுதிக்கு உள்ளிட்ட கோட்டாட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்குவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக கூறி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியும் போரட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து அங்கு திமுகவினரும் குவிந்தனர்.
தமிழகத்தில் எம்.பி. தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனையடுத்து வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கரூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஜோதிமணியும், அதிமுக சார்பில் தம்பிதுரையும் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக செந்தில்பாலாஜி உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு சேகரிப்புக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 16-ம் தேதி நடைபெறும் இறுதிகட்ட பிரச்சாரத்திற்கு நேரம், இடம் ஒதுக்கீடு செய்வதில் தேர்தல் அதிகாரிகள் ஒருதலை பட்சமாக செயல்படுகின்றனர் என செந்தில்பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். அதனால், கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஜோதிமணி மற்றும் திமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 மணி நேரமாக நீடித்த போராட்டம், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், பிரச்சாரம் செய்ய திமுக கூட்டணிக்கு மாலை 4 முதல் 6 மணி வரையும், அதிமுக கூட்டணிக்கு பிற்பகல் 12 முதல் 2 மணி வரையும் நேரம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து உள்ளிருப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
முன்னதாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கலின்போது டி.எஸ்.பிக்களுடன் செந்தில்பாலாஜி வாக்குவாதம் ஈடுப்பட்டது. பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க செந்தில்பாலாஜி முன்ஜாமீன் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.