சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, "தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதனை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விடத் தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. பாரதத்தின் பகுதியே தமிழகம். தமிழகம் பாரதத்தின் அடையாளம்" என்று தெரிவித்திருந்தார்.
ஆளுநர் ரவியின் இந்தக் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. அதுமட்டுமல்லாமல் இணையவாசிகள் பலரும் ‘தமிழ்நாடு’ என்று குறிப்பிட்டு ஆளுநர் ரவியின் கருத்திற்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இதனால் தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்திடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''தமிழுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம். அவருக்கு என்ன தெரியும் தமிழை பற்றி. ஒரு ஐந்து வருடத்திற்காக இங்கே வந்துவிட்டு தமிழைப் பற்றி அவர் பேசுகிறார் என்றால் அவருக்கு தமிழைப் பற்றி எதுவும் தெரியவில்லை என்று அர்த்தம். தமிழகம் என்பதும் தமிழ்நாடு என்பதும் ஒன்றுதான். அகம் என்பதன் பொருளே நாடுதான். எனவே தமிழ் பற்றி தெரியாதவர் சொல்லும் கருத்தை நாம் சீரியஸாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. அரைவேக்காட்டுத்தரமாகத் தமிழக கவர்னர் சொன்ன அந்த கருத்துக்கு ஒட்டுமொத்த தமிழக மக்கள் மற்றும் தேமுதிக சார்பாக கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.
ஏற்கனவே ஆதார் அட்டை மூலம் மக்களுக்கு தர வேண்டிய அனைத்து சலுகைகளும் தரப்பட்டு கொண்டிருக்கிறது. வெளி மாநிலத்திலிருந்து தற்பொழுது தமிழ்நாட்டில் அதிகமான பேர் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் முதலில் எவ்வளவு பேர் வெளிமாநிலத்தில் இருந்து இங்கு வந்து வேலை செய்கிறார்கள் என்ற குறிப்பை தமிழக அரசு எடுக்க வேண்டும். அது மட்டுமல்ல மக்கள் ஐடி என்று ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு ஐடி என்றால் அது நாட்டில் உள்ள அனைவருக்கும் பெரிய குழப்பத்தை நிச்சயமாக ஏற்படுத்தும். இந்த திட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன் மக்களிடம் கருத்து கேட்பு நடத்த வேண்டும். வெளிப்படை தன்மை இருக்க வேண்டும். இந்த திட்டம் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறதா என்று தெரிந்து கொண்டு இந்த அரசு அதனைப் பற்றி பேச வேண்டும்'' என்றார்.