பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் விருதுநகர் மாவட்டத்தை முதலிடத்துக்குக் கொண்டுவந்த ஆசிரியர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில், தன்னை உணர்ந்து பேசி, எதிரில் இருப்பவர்களின் அருமை தெரிந்து, வெகு இயல்பாகப் பேசி, ஆச்சரியப்பட வைத்தார் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி.
“அன்னைக்கு நான் சபாநாயகர் தனபால் ரூம்ல இருந்தேன். அப்ப டிவில ஸ்க்ரோல் ஓடுச்சு. பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் முதலிடம்னு. அதை பார்த்துட்டு எல்லா அமைச்சர்களும் எனக்கு வாழ்த்து தெரிவிச்சாங்க. வேற மாவட்டத்துக்கு விட்டுக்கொடுக்கவே மாட்டீங்களான்னு கேட்டாங்க. இந்தப் பெருமைக்கு எந்த விதத்தில் நான் சொந்தம் கொண்டாட முடியும்? எந்த ஸ்கூலுக்காச்சும் போய் நான் மாணவர்களுக்குப் பாடம் நடத்தினேனா? இல்லைன்னா, எங்க அப்பா ஸ்கூல் வாத்தியாரா? இல்லியே! இப்படி ஒரு ரிசல்ட் வர்றதுக்கு காரணம், வருஷம் பூராவும் உழைச்ச ஆசிரியர்களாகிய நீங்கதான். உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாழ்த்துதான், மாவட்ட அமைச்சர்ங்கிற முறையில், அன்னைக்கு எனக்கு கிடைச்சது. அந்த உணர்வோடுதான், கலெக்டர்கிட்ட சொல்லி, ஆசிரியர்களுக்குப் பாராட்டுவிழா நடத்தணும்னு சொன்னேன்.
இன்னைக்கு நான் அமைச்சரா இருக்கேன்னு சொன்னா, அதுக்குக் காரணம் என்னை உருவாக்கிய ஆசிரியர்கள்தான். சின்ன வயசுல எங்க வீட்ல ரொம்ப கஷ்டம். வறுமையின் கோரப்பிடியில் எங்க குடும்பம் சிக்கித் தவிச்சப்ப, பிலோமினாங்கிற டீச்சர்தான் எனக்கு சாப்பாடு போட்டு ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போனாங்க. இப்ப அவங்க இருக்கிறாங்களா, இல்லியான்னுகூட தெரியல. அப்ப, சேட்டை பண்ணிக்கிட்டு, ஸ்கூலுக்குப் போகாம ஊர் சுத்திக்கிட்டிருந்தேன். சின்னச்சாமி வாத்தியாருதான் என்னைத் தேடிக் கண்டுபிடிச்சு, அடிச்சு படிக்க வச்சாரு. பத்து படிக்கிறப்ப செட்டு சேர்த்துக்கிட்டு, ஸ்கூலுக்கு வராம திரிஞ்சேன். சீத்தாராமன் ஹெட்மாஸ்டர் விடல. என்னை இழுத்துட்டு வந்து, ஸ்கூல் கிரவுண்ட்ல முட்டிக்கால் போட வச்சாரு. அப்ப என்கிட்ட ‘டேய்.. படிச்சாத்தான்டா நாலு பேரு மாதிரி வாழ்க்கையில நல்லா இருக்க முடியும்’னு புத்திமதி சொன்னாரு. அவரு பேச்சைக் கேட்டு ஏதோ ஓரளவுக்கு அப்ப படிச்சதாலதான், இன்னைக்கு கோட்டையில உட்கார்ந்து, பைல் பார்க்கிற அளவுக்கு உயர முடிஞ்சிருக்கு.
உங்ககிட்ட படிக்கிறவங்க கலெக்டராகலாம்; டாக்டராகலாம்; இன்ஜினியராகலாம்; என்னை மாதிரி மந்திரியும் ஆகலாம். அப்ப, என்கிட்ட படிச்சவன்னு பெருமையா சொல்லுவீங்க. ஆனா, எங்களையெல்லாம் ஏணியா இருந்து ஏற்றிவிட்டு, நீங்க மட்டும் கடைசிவரை ஆசிரியரா அதே இடத்துல இருப்பீங்க. அப்படி ஒரு உன்னதமான பணி, ஆசிரியர் பணி. உங்களைப் பாராட்டுறதுக்கு என்கிட்ட வார்த்தைகளே இல்லை.” என்று ‘டச்சிங்’ ஆகப் பேசினார் கே.டி.ராஜேந்திரபாலாஜி.
“பரவாயில்லையே! ஆசிரியர்களை வாழ்த்துவதற்காக, கடந்துபோன வறுமைக்காலத்தையும், படிக்கும்போது பொறுப்பில்லாமல் திரிந்ததையும், அமைச்சராக இருந்தும், இத்தனை வெளிப்படையாகச் சொல்கிறாரே!” என்று சக ஆசிரியரிடம், தன் பங்குக்கு அமைச்சரைப் பாராட்டினார் ஒரு ஆசிரியர்.
எழுத்தறிவித்த இறைவன் அல்லவா? எத்தனை பாராட்டினாலும் தகும்!