தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் வரும் 14 ஆம் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்ட சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் இன்று (12.01.2025) நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அன்னை தயாளு அம்மாள் தொண்டு நிறுவனத்தில் தையல் பயிற்சி, கணினி பயிற்சி (Tally) பயின்ற மற்றும் தற்போது பயிற்சியில் உள்ள 3 ஆயிரத்து 300 மாணவ, மாணவிகளுக்குப் பொங்கலுக்குத் தேவையான அரிசி, வெல்லம், மளிகை பொருட்கள், கரும்பு, குடை, ஹாட் பாக்ஸ் அடங்கிய பரிசுத் தொகுப்பை வழங்கி பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
இவ்விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியிலாவது பாஜக வெற்றி பெற்றுவிட வேண்டும் என பிரதமர் மோடி நினைத்தார். ஆனால் அது நடைபெறவில்லை. அரசு சார்பில் என்ன கொடுக்கப்படுகிறதோ அதைப் படித்துவிட்டுச் செல்ல வேண்டும் என்பதுதான் ஆளுநரின் வேலை. தமிழ்நாட்டில் அரசியல் செய்ய ஒருவர் இருக்கிறார். ஆளுநர் சட்டமன்றத்தில் வாக்கிங் செல்கிறார். அவர் சட்டப்பேரவைக்கு வருவதும் தெரியவில்லை, போவதும் தெரியவில்லை. நாம் அரசியல் செய்கிறோமோ இல்லையோ, நம்மைவிட ஆளுநர் அரசியல் செய்கிறார். தமிழ்நாட்டின் பெயரை மாற்ற வேண்டும் எனச் சொன்னவர் ஆளுநர் ஆர்.என். ரவி. இதற்கு ஒட்டுமொத்த தமிழக மக்களும் எதிர்ப்பு தெரிவித்தவுடன் மன்னிப்பு கேட்டார். அதன்பிறகு திருவள்ளுவருக்குக் காவி சாயம் பூசினார். புதிய கல்விக் கொள்கை என்ற ஒன்றைக் கொண்டு வருகிறார்கள். விஸ்வகர்மா திட்டம் என்ற திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று ஆளுநர் சொல்கிறார். குலக்கல்வி திட்டத்தை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?.
இதற்கு எல்லாம் திமுகதான் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை. வித்தியாசமான எதிர்க்கட்சி தலைவரைப் பெற்றிருக்கிறோம். அவர்தான் எடப்பாடி பழனிசாமி. அவர் சட்டமன்றத்தில் பேசும்போது ஆளுநரையும், அவர் பேசுவதையும் ஏன் திரையில் காட்டவில்லை எனக் கேட்கிறார். அவர் பேசவில்லை என்றாலும் அவர் வந்து போவதையாவது காட்டுங்கள் என்று பேசுகிறார். 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி சேர்ந்து ஒன்றாக வருவார்கள். அவர்களை விரட்டுவது சுலபம். சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும். 11 தோல்வி பழன்சாமி என எடப்பாடி பழனிசாமி அழைக்கப்படுவார் ” எனத் தெரிவித்தார்.