தமிழகத்தில் பொங்கல் திருநாள் தமிழர்கள் மத்தியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் விழாவாக உள்ளது. இதில் இயற்கையை வணங்கும் விதமாக தை 1ஆம் தேதியில் சூரிய வழிபாடு, அடுத்த நாள் விவசாயத்துக்கு உதவும் மாடுகளுக்கு நன்றியுரைக்கும் விதமாக மாட்டுப் பொங்கலும் விவசாயிகளின் திருவிழாவாக ஆண்டாண்டு காலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை நந்தம்பாக்கத்தில் திமுக சார்பில் இன்று (13.01.2025) நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் அவர் பேசுகையில், “பெண்கள் உயர்கல்வியில் சாதனை படைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று புதுமைப்பெண் என் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கினார். அரசுப் பள்ளியில் படித்து, கல்லூரிக்குச் சென்று எந்த படிப்பைத் தேர்ந்தெடுத்தாலும் மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் மாணவிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அதேபோன்று மாணவர்களுக்குத் தமிழ் புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் 20 லட்சம் குழந்தைகள் இந்த திட்டத்தின் கீழ் பயன் அடைந்து வருகிறார்கள். வேலைகளுக்குக் காலையில் சீக்கிரமாகச் செல்லும் பெற்றோர்கள், பசியோடு பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பி விடுவார்கள் ஆனால் அவ்வாறு பள்ளிக்கு அனுப்பிய தாய்மார்கள் குழந்தையைப் பசியோடு அனுப்பி விட்டோம் என்று கவலைப்படுவார்கள். ஆனால் இன்றைக்குப் பெற்றோர்கள் மகிழ்ச்சியோடு தங்களுடைய குழந்தைகளைப் பள்ளி பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். என்னுடைய குழந்தையைப் பார்த்துக் கொள்ள முதலமைச்சர் இருக்கிறார். திராவிட மாடல் அரசு இருக்கிறது என்ற நம்பிக்கையில் பெற்றோர்கள் குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
ஒவ்வொரு நாளும் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய அரசுப் பள்ளி மாணவர்கள் 20 லட்சம் குழந்தைகள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுகிறார்கள். இதற்கெல்லாம் மகுடம் சூட்டுவது போல் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். இந்த திட்டத்தைச் செயல்படுத்த முடியாது என்று எதிர்க்கட்சிகள் குறை கூறின. ஆனால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் இந்த திட்டத்தை நிறைவேற்றிக் காட்டினார். இதற்காக ஒரு கோடியே 52 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டது. அதில் கிட்டத்தட்ட 70% விண்ணப்பங்கள், அதாவது ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரையில் ஒவ்வொரு மகளிருக்கும் கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த ஜனவரி மாதம் வரை 16 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டங்களை எல்லாம் மக்களிடம் கொண்டு போய் சொல்லுங்கள். முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியது போலக் குறைந்தபட்சம் 200 தொகுதிகளை வெல்ல வேண்டும். அந்த 200 தொகுதிகளில் இந்த காஞ்சிபுரத்தின் வடக்கு திமுக மாவட்டத்தில் ஆறு தொகுதிகளை வெல்லப்போவது உறுதி என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள். ஆளுநருக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். அதிமுக - பாஜக இடையே உறுதி செய்யப்படாத கூட்டணி தொடர்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்து எங்களுக்கு முக்கியம் தான்” எனப் பேசினார்.