காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதனால், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 10.01.2025 அன்று தொடங்கியது. வரும் 17ஆம் தேதியோடு வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 18ஆம் தேதி நடைபெறும். வேட்பாளர்கள் தங்களுடைய வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜனவரி 20ஆம் தேதி கடைசி நாளாகும்.
தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக போட்டியிடும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. திமுக தலைமை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என அறிவிப்பை வெளியிட்டது. திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளராக உள்ள வி.சி.சந்திரகுமார் ஈரோடு இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட இருக்கிறார்.
இந்நிலையில் ஏனைய எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இந்த இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது. அதேநேரம் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி இந்த இடைத்தேர்தலில் போட்டியிட இருக்கிறது. இதற்கு முன்பு ஈரோடு கிழக்கில் நடந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியில் பெண் வேட்பாளருக்கு வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில் இந்த முறையும் நாம் தமிழர் கட்சி சார்பாக பெண் வேட்பாளர் போட்டியிட இருக்கிறார்.
இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நடக்கவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மா.கி.சீதாலட்சுமி (முதுகலை அறிவியல் திறைஞர்) எம்.ஏ எம்.பில் போட்டியிடுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட மற்றும் தொகுதி உள்ளிட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களும், அனைத்து பாசறைகளில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
சமீபமாக பெரியார் குறித்து சீமான் பேசி வருவது சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் பெரியார் பிறந்த ஈரோட்டில் நடைபெறும் இடைத்தேர்தலில் திமுகவும் நாம் தமிழரும் நேருக்கு நேர் போட்டியிடுவது அரசியல் களத்தோடு நில்லாமல் தேர்தல் களத்தையும் சூடாக்கி இருக்கிறது.