மத்திய பாஜக அரசின் செயல்களை மக்களிடம் அம்பலப்படுத்தும் விதமாக புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று (16.07.2021) செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில், காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஏ.வி.எஸ். சுப்ரமணியம், வைத்திலிங்கம் எம்.பி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
அப்போது முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், "புதுச்சேரியில் மூன்றாவது அலையில் டெல்டா பிளஸ், ஜிகா வைரஸால் பாதிக்கப்பட கூடிய அபாயம் இருப்பதாகவும் பள்ளிகளைத் திறக்கக் கூடாது எனவும் பல்வேறு தரப்பினர் அரசை வலியுறுத்தினர். நானும் கரோனா குறையவில்லை, எனவே பள்ளி, கல்லூரிகள் திறக்கக் கூடாது என கூறினேன். ஆனால் அதற்கு கருத்து தெரிவித்த முதல்வர் ரங்கசாமி, ‘16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்’ என்று கூறிய நிலையில், கல்வித்துறை வேறு ஒருவருக்கு (நமச்சிவாயம்) ஒதுக்கப்பட்டது. அவர் துணைநிலை ஆளுநரைச் சந்தித்துவிட்டு, 'கரோனா இன்னமும் குறையவில்லை. எனவே பள்ளி, கல்லூரிகள் திறக்கக் கூடாது' என முதல்வர் உத்தரவை தன்னிச்சையாக மாற்றி அறிவிப்பு வெளியிட்டார். இதிலிருந்து ஆட்சி, நிர்வாகம் ரங்கசாமியின் கட்டுப்பாட்டில் இல்லை என தெரியவந்துள்ளது. முதல்வர் அறிவித்த பின்னர் அதனை மாற்றி அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டது, புதுச்சேரியில் ரங்கசாமி ஆட்சி நடக்கிறதா அல்லது பாஜக ஆட்சி நடக்கிறதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது" என்றார்.