சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விருது வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்க முதலமைச்சர் டெல்லி சென்றுள்ளார். இது மிக முக்கியமான ஒரு நிகழ்வு. திமுக மேல் எப்போதும் குற்றச்சாட்டுகளை சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள். நாங்கள் அதையெல்லாம் தகர்த்தெறிந்துவிட்டு எங்களது வேலைகளை பார்த்துக்கொண்டு தான் இருப்போம். ஆடியோ குறித்து கேட்கிறார்கள். அண்ணாமலை அவர் பேசுவதாகவே பல ஆடியோ வந்தது. அதைப் பற்றி யாராவது கேட்டீர்களா?
ஐடி ரெய்டு எப்போதும் நடப்பது தானே. இது என்ன புதிதா. வருடா வருடம் நடந்துள்ளது. இதுவரை யார் மேலாவது எதாவது குற்றச்சாட்டுகளை சொல்லியுள்ளார்களா? யார் மேலாவது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதா? எதாவது வழக்கு நடந்துள்ளதா? யாராவது தண்டிக்கப்பட்டுள்ளார்களா?
திமுகவை எல்லாம் யாராலும் அச்சுறுத்த முடியாது. நீங்கள் பயப்படாமல் இருங்கள். உங்களைத்தான் நிறைய பேர் அச்சுறுத்துகிறார்கள். நீங்கள் சென்றால் க்ளாஸ் ரூமில் மாணவர்களை நடத்துவது போல் ஒருவர் நடத்துகிறார். ஒரு கேள்வியும் கேட்கக் கூடாது என்கிறார். ஒரு வாரத்தில் வாங்க என சொன்னார். அதன் பின் போனீர்களா? அவர் கர்நாடகத்தில் இருக்கிறார் என சொல்கிறீர்கள். நான் தமிழ்நாட்டில் இருப்பதால் என்னை கெள்வி கேட்கிறீர்கள். நேற்று தமிழ்த்தாய் வாழ்த்திற்கு அவ்வளவு பெரிய அவமரியாதை ஏற்பட்டுள்ளது. அதைப் பற்றியெல்லாம் கேட்கவில்லை. நான் தமிழ்நாட்டில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் கேட்பீர்களா?” எனக் கூறினார்.