2023 ஆம் ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆளுநர் ரவி உரையுடன் 9 ஆம் தேதி தொடங்கிய நிலையில், நான்காவது நாளான இன்று சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றக் கோரி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவையில் இந்தத் தீர்மானம் குறித்த விவாதத்தின் போது சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, “தமிழ்நாட்டு மக்களின், குறிப்பாக தென் தமிழ்நாட்டு மக்களின் நீண்டகாலக் கனவாக இருப்பது சேது சமுத்திரத் திட்டம். அதனை ராமர் பாலம் என்று சொல்லி மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது. இதை மக்கள் நம்ப வேண்டும் என்று முயல்கிறது. கட்டுக்கதைகளும், கற்பனைகளும், நம்பிக்கைகளும் வரலாறு ஆகாது” எனப் பேசினார். பல்வேறு அரசியல் தலைவர்களும் சேது சமுத்திரத் திட்டம் குறித்து தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சேது சமுத்திரத் திட்டம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, ''சேது சமுத்திரத் திட்டத்தால் பொருளாதார ரீதியில் இயங்கும் பெரிய கப்பல்களுக்கு லாபம் இருக்காது. ஒரு திட்டம் கொண்டு வந்தால் ஆண்டுக்கு 12 சதவீத வருமானம் தர வேண்டும் ஆனால், சேது சமுத்திரத் திட்டத்தால் வருமானம் இருக்காது. மீனவர்களுக்கும் இந்தத் திட்டத்தால் பயனில்லை. மத்திய அரசுடன் இணைந்து புதிதாக சேது சமுத்திரத் திட்டத்தை உருவாக்கினால் பாஜக ஆதரிக்கும்'' எனத் தெரிவித்துள்ளார்.