Skip to main content

கோயிலில் உரிமையில்லை... தேர்தலை புறக்கணித்த கிராமம்

Published on 19/04/2019 | Edited on 19/04/2019

கும்பகோணம் அருகே கோயில் திருவிழாவில் தங்களை புறக்கணிப்பதாக  உடையாளுர் அருகே உள்ள காங்கயம் பேட்டை, அண்ணா நகர்  உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் தேர்தலைப் புறக்கணித்து எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

 

election

 

 உடையாளுரில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான செல்வகாளியம்மன் கோவில் உள்ளது. அங்குள்ள  தாழ்த்தப்பட்ட மக்களும் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்புவரை சாமி தரிசனம் செய்தும், திருவிழா காலத்தில் சாமியை தூக்கியும் வந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த ஆண்டு கோயில் திருவிழாவில் தாழ்த்தபட்ட சமூகத்தினருக்கும், மற்ற சிலருக்கும் மோதல் ஏற்பட்டது. அதன்பிறகு இந்த ஆண்டு கோயில் திருவிழாவில் தாழ்த்தப்பட்டவர்கள் கலந்துகொள்ளவோ, அவர்கள் தெருக்களுக்கோ சாமி செல்லாது என அறிவித்து, போலீஸ் பாதுகாப்போடு திருவிழாவை நடத்திவிட்டனர். இது குறித்தான வழக்கு மதுரை நீதிமன்றத்தில் உள்ளது.



இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தல் அறிவித்ததுமே, தேர்தலை புறக்கணிப்பதாக தாழ்த்தப்பட்ட மக்கள் அறிவித்திருந்தனர். முதற்கட்டமாக கும்பகோணத்தில் தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் பிறகு ஆர்.டி.ஓ. தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிலும் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை.
 

 இந்த சூழலில் நேற்று தேர்தல் நடந்தது. அந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் 650 வாக்குகள் பதிவாக வேண்டிய இடத்தில் வெறும் 50 வாக்குகள் மட்டுமே பதிவானது மீதமுள்ள மக்கள் எங்களுக்கு கோயிலில் வழிபடும் உரிமை மறுக்கப்பட்டது. இந்த நாட்டில் வாழத் தகுதியற்றவர்களாக இருக்கிறோம், அதனால் தேர்தலை புறக்கணித்து விட்டோம். என அவரவர்கள் வழக்கம்போல் வீடுகளிலும் விவசாய வேலைக்கு சென்றுவிட்டனர்.
 

election

 

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மக்களிடம் விசாரித்தோம், "மிகவும் பழமையான கோவில் 65 ஆண்டுகளுக்கு மேல் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில். தாழ்த்தப்பட்ட மற்றும் இதர சமூக மக்களுக்கும் அந்த கோயில் பொதுவானது.  அந்த கோயில் முன் ஏழு,  பின் ஏழு நாள் திருவிழா நடக்கும். இந்த திருவிழாவில் சாமி தூக்குவதிலிருந்து சாமி தரிசனம் வரை எல்லா உரிமைகளும் எங்களுக்கு இருந்துச்சு, கடந்த ஆண்டு சிறு தகராறு ஏற்பட்டது, அதை சாக்காவைத்து இந்த ஆண்டு எங்களுக்கான உரிமைகளை முற்றிலுமாக மறுத்துவிட்டனர். அதிகாரிகளிடம் கடந்த மாதமே நாங்கள் தேர்தலை புறக்கணிப்பதாக கூறிவிட்டோம், அதிகாரிகள் எந்தவித முன்னேற்பாடுகளும் செய்யாமல் எங்களை வேண்டுமென்றே புறக்கணித்துவிட்டனர். அதனால் தேர்தலைப் புறக்கணித்துள்ளோம்" என்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்