Published on 09/09/2019 | Edited on 09/09/2019
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அமைச்சர்கள் பலரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்வது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் எகிப்தும், அமைச்சர் சி.வி.சண்முகம் சிங்கப்பூரும் செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதில் என்னவென்றால் யாருக்கும் கிடைக்காத முக்கியத்துவம், முதல்வராக இருப்பதால் எடப்பாடியின் சுற்றுப்பயணத்துக்கு கிடைத்துள்ளதாக கூறுகின்றனர். முதல்வர் எடப்பாடி தமிழகத்தில் இல்லை என்றதும், விடுமுறை எடுக்காமல் இருந்த அதிகாரிகள் கூட தற்போது விடுமுறை எடுத்து விட்டு குடும்பத்தோடு சுற்றுலா சென்றுள்ளதாக கோட்டை வட்டாரங்கள் கூறுகின்றனர்.

அதனால் கோட்டையின் பெரும்பாலான பகுதி அதிகாரிகள் இல்லாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் எடப்பாடி கடந்த 29ஆம் தேதி வெளிநாடு கிளம்பிய போது ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று மரியாதை செலுத்திவிட்டுட்டு செல்வார் என்று அமைச்சர்களும், அதிமுக கட்சியினரும், அதிகாரிகளும் எதிர்பார்த்தனர். ஆனால் எடப்பாடி அஞ்சலி செலுத்தாமல் விமான நிலையத்துக்கு சென்றுவிட்டார். இதுபற்றி தயக்கத்தோடு அவரிடம் அமைச்சர்கள் கேட்டபோது, "நான் முதல்வரான பிறகு தற்போது தான் முதல்முறையாக வெளிநாடு செல்கிறேன். அதனால் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று விட்டு செல்வது சரியாக இருக்காது. அதே சமயம் ஜெயலலிதா உருவத்தில் சசிகலா இருக்கார் என்று சொன்னதாக தகவல் சொல்லப்படுகிறது. அதனால் அவருக்குத் தகவல் அனுப்பிவிட்டு தான் செல்கிறேன் என்று கூறியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இது அ.தி.மு.க.வில் இருக்கும் ஜெ. விசுவாசிகளை கடுப்பில் ஆழ்த்தியதாக சொல்லப்படுகிறது.