திமுக அரசைக் கண்டித்து மதுரையில் நவம்பர் 16ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக ஆட்சிக் காலங்களில் மக்கள் நலன் காக்கும் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுச் செயல்படுத்தப்பட்டதை இந்த நாடே நன்கு அறியும். இந்நிலையில், நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, ஆட்சிக்கு வந்த முதல்வர் மு.க. ஸ்டாலினின் திமுக அரசு, கடந்த 42 மாத காலமாக அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முடக்கியும், கிடப்பில் போட்டும் வைத்துள்ளது மிகவும் கண்டனத்திற்குரிய விஷயமாகும்.
அந்த வகையில், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட லோயர்கேம்ப் - மதுரை மாநகராட்சி - இரும்புக் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இத்திட்டத்தை முடக்கியுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினின் திமுக அரசைக் கண்டித்தும்; தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவித்த, திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள விரிவாக்கப்பட்ட மாநகராட்சி பகுதிகளுக்கான பாதாளச் சாக்கடைத் திட்டத்தை, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு வேண்டுமென்றே தாமதப்படுத்துவதைக் கண்டித்தும்; பொதுமக்கள் நலன் கருதி, மதுரை மாவட்டம் முழுவதும் சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீர்படுத்த வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
மேலும் வண்டல் மண் அனுமதி என்ற போர்வையில் கனிம வளம் கடத்தலைக் கண்டித்தும்; மதுரை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு மக்கள் விரோத செயல்களைக் கண்டும் காணாமலும் இருந்து வரும் முதல்வர் மு.க. ஸ்டாலினின் திமுக அரசைக் கண்டித்தும் அதிமுக மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் நவம்பர் 16ஆம் தேதி (16.11.2024 - சனிக் கிழமை) காலை 10.30 மணியளவில் திருப்பரங்குன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், முன்னாள் அமைச்சர் தங்கமணி, தலைமையிலும், அதிமுக மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா முன்னிலையிலும் நடைபெறும்”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.