விருதுநகர் மாவட்டத்தில் திமுக வேட்பாளர்களாக சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் நால்வரும் அறிவிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரான கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அருப்புக்கோட்டை தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. ஆவார். இவரே திமுக வேட்பாளராக மீண்டும் களமிறங்கியிருக்கிறார். ‘அண்ணாச்சி’ என்றும் ‘சாத்தூரார்’ என்றும் அழைக்கப்படும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., விருதுநகர் மாவட்டத்தின் ஆளுமை மிக்க அரசியல் தலைவர் ஆவார். எம்.ஜி.ஆர். காலத்து அரசியல்வாதியான இவர், 1977-லிருந்து 10 தடவை சட்டமன்றத் தேர்தல்களைச் சந்தித்து, 8 தடவை வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.வாக சட்டமன்றம் சென்றவர். மூன்று முறை தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். இவரை எதிர்த்து இத்தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார் வைகைசெல்வன்.
விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரான தங்கம் தென்னரசு, திருச்சுழி தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. ஆவார். மீண்டும் இத்தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இவர் முதலில் அருப்புக்கோட்டை தொகுதியில் ஒரு தடவையும், அடுத்து திருச்சுழி தொகுதியில் இரண்டு தடவையும் போட்டியிட்டு, தொடர்ந்து வெற்றிவாகை சூடியவர். 2006-2011 காலக்கட்டத்தில் திமுக அமைச்சரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தார். ‘ஜென்டில்மேன்’ அரசியல்வாதியான இவர், அரசியலுக்கு அப்பாற்பட்டு இத்தொகுதி மக்களிடம் நல்ல பெயர் எடுத்துள்ளதால், ‘நிரந்தர எம்.எல்.ஏ.’ என்று அழைக்கப்படுகிறார். இவரை எதிர்த்து, வேட்பாளராகக் களமிறங்கியிருக்கிறார், அதிமுக கூட்டணியில் உள்ள மூவேந்தர் முன்னணி கழகத்தின் பொதுச்செயலாளரான எஸ்.ராஜசேகர் என்ற எஸ்.ஆர். தேவர்.
விருதுநகர் தொகுதியின் வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அறிவிக்கப்பட்டுள்ளார். படோடபமோ, பகட்டோ, பந்தாவோ இல்லாத ‘சைலன்ட்’ அரசியல்வாதியான இவர், யாருக்கும் எந்த தொந்தரவும் செய்யாதவர். பா.ஜ.க.வுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதால், அக்கட்சியின் வேட்பாளர் இவரை எதிர்த்து நிற்கிறார்.
விருதுநகர் மாவட்டத்தில் சுறுசுறுப்பான திமுக எம்.எல்.ஏ. என்று பெயரெடுத்திருக்கும் ராஜபாளையம் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியனுக்கு, மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த தடவை இவர் எதிர்கொள்ள வேண்டிய அதிமுக வேட்பாளர், தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. தங்கபாண்டியன் மண்ணின் மைந்தர் என்றாலும், தொகுதி மாறி போட்டியிடும் ராஜேந்திரபாலாஜி பலம் பொருந்திய ‘பலே அரசியல்வாதி’ என்பதால், இவருக்கு இது சவாலான தேர்தல்தான்!