இணையத்தில் மோசமாக விமர்சனம் செய்தீர்கள் என்றால் அதற்கான நடவடிக்கை நிச்சயம் இருக்கும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக “மோசமாக விமர்சிப்பவர்களை மேலும் மோசமாக விமர்சனம் செய்யவே தூண்டும்” என புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும் திமுக மாநில அமைப்பாளருமான சிவா கூறியுள்ளார்.
புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா இது குறித்துப் பேசுகையில், “புதுச்சேரியில் ஆளுநர் தமிழிசை பேசும்பொழுது மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்கள். விமர்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஜனநாயகத்தில் பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை அனைவருக்கும் பொதுவானது. அரசியல்வாதிகள், சமூகத்தில் உயர்நிலையில் இருப்பவர்களும் இதைச் சகிப்புத்தன்மையுடன் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்க வேண்டும். இந்த உச்சபட்ச அதிகாரத்தை வைத்து இவர் அதிகப்படியாகப் பேசுவதை ஒரு காலமும் திமுக அனுமதிக்காது” எனக் கூறினார்.
மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆளுநர் பேசியதை வன்மையாக கண்டிக்கிறோம். அரசியல் கட்சித் தலைவர்களுக்கு விமர்சனத்தை எதிர்கொள்ளும் பக்குவம் இருக்கவேண்டும். மாறாக என்னை (ஆளுநரை) கடுமையாக விமர்சித்தால் இனி விமர்சிக்கவே முடியாத சூழல் ஏற்படும் என்றெல்லாம் மிரட்டுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஜனநாயகத்திற்கும், பேச்சுரிமைக்கும் எதிரானது. மேலும், மோசமாக விமர்சனம் செய்பவர்களை மேலும் மோசமாக விமர்சனம் செய்யவே தூண்டும்.
விமர்சித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கூற்றை ஆளுநர் திரும்பப் பெற வேண்டும். ஆளுநர்களுக்கான எல்லைகளை உணர்ந்து ஆளுநர்கள் செயல்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.