மாற்றுக் கட்சியிலிருந்து திமுகவில் இணையும் விழா திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நடைபெற்றது.
இந்த விழாவில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பனின் தலைமையில் சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ''குறிப்பாக அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் ஒப்படைத்துக் கொள்வதற்காக ஏறக்குறைய 2,000 பேர் வந்துள்ளனர். நமது பழனியப்பன் இங்கு உரையாற்றும்பொழுது குறிப்பிட்டு சொன்னார். கொஞ்சம் லேட்டாக வந்துள்ளேன் என்றார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வசனம் உங்களுக்கு தெரியும் 'லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திருக்கிறார்'. ரொம்ப நாளா நான் அவர் மீது கண்ணுவெச்சது உண்டு. ஜெயலலிதா முதல்வராக இருந்தபொழுது அமைச்சரவையில் அவரை உற்று கவனிப்பேன்.
வேண்டுமென்றே சில அதிமுக அமைச்சர்கள் எங்களுக்கு கோபம் வரவேண்டும், வெறுப்பு வரவேண்டும் என திட்டமிட்டு, வெளிநடப்பு செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடு பேசுவது வழக்கம். ஒரு நான்கைந்து பேர் எந்த பிரச்சனைக்கும் வரமாட்டார்கள். அரசினுடைய திட்டங்கள், மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் அதைமட்டும் பேசும் சில அமைச்சர்கள் அங்கு இருந்தார்கள். அதை நான் மறுக்கவில்லை. அதில் முதல் ஆள் பழனியப்பன். சில அமைச்சர்கள் தரம்தாழ்த்து பேசுவதால் நாங்களும் வெளிநடப்பு செய்வோம். ஆனால் பழனியப்பன் பேசினால் முழுமையாகக் கேட்டுவிட்டு சென்றவர்கள் நங்கள்.
அவரை கட்சியில் சேர்க்கவேண்டும் என எவ்வளவோ முயற்சி செய்தோம். எவ்வளவோ யார் யாரையோ தூதுவிட்டோம். ஆனால் அந்த சூழலில் அவரால் வர முடியவில்லை. இப்பொழுது எனது விருப்பத்தை ஏற்று வந்துள்ளார். அவரை வரவேற்கிறேன். தருமபுரி மாவட்டத்தை வீக்... வீக்... என்று சொல்வார்கள். இனி யாரும் தர்மபுரி மாவட்டத்தை வீக் என்று சொல்லக் கூடாது சொல்லவும் முடியாது'' என்றார்.