
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக வடகிழக்கு பருவமழையின் காரணமாக கனமழை பெய்து, 10 வருடங்களுக்குப் பிறகு மாவட்டத்தில் உள்ள ஏராளமான கண்மாய்கள், ஏரி, குளங்கள் நிரம்பி, உடைப்பெடுத்து காட்டாறுகள் சென்றுகொண்டிருக்கிறது. பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி அதிகாரிகளே போக்குவரத்தை தடை செய்துள்ளனர். மேலும், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிவிப்புகள் வெளிவருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதியில் நிரம்பியுள்ள ஏரி குளங்களை விஜயபாஸ்கர் சென்று பார்த்துவருகிறார். நேற்று (28.11.2021) குளத்தூர் பெரிய கண்மாயில் தண்ணீர் நிரம்பியுள்ளதைப் பார்க்க விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ மற்றும் அதிமுகவினர் சென்றனர். அப்போது விஜயபாஸ்கரை எதிர்த்துப் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் பிரபாகரனும் தனது ஆதரவாளர்களுடன் சென்றிருந்தார். இருவரும் ஒன்றாக ஏரியைப் பார்த்தனர்.

அந்த சந்திப்பு பற்றி அதிமுக ஐ.டி. விங் சமூகவலைதளங்களில் சிலர் அமமுகவினருக்கு எதிரான பதிவுகளைப் போட்டதால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், அமமுக பிரமுகர் தாக்கியதில் அதிமுக ஐ.டி. விங் ஆறுமுகம் முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டிய நிலையில் கீரனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இது சம்மந்தமாக புகார் வேண்டாம் என்று இருதரப்பினரும் சமாதானப் பேச்சுவாராத்தையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கருத்தறிய ஆறுமுகத்தை தொடர்புகொண்டபோது, சிறிது நேரத்தில் பேசுவதாக கூறியவர் பிறகு தொடர்பில் வரவில்லை. இந்த சம்பவம், புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக - அமமுக இணைவதை தொண்டர்கள் ஏற்கவில்லை என்பதைக் காட்டுவதாக விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.