
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 31வது போட்டி, பஞ்சாப்பில் உள்ள மகாராஜா யதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (15.04.2025) இரவு நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 15 ஓவர்கள் 3 பந்துகளில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 111 ரன்களை மட்டுமே எடுத்தது.
அந்த வகையில் பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 15 பந்துகளில் 30 ரன்களை குவித்தார். பிரியான்ஸ் ஆர்யா 12 பந்துகளில்22 ரன்களையும், ஷாஷாங்க் சிங் 17 பந்துகளில் 18 ரன்களையும் எடுத்தனர். எனவே கொல்கத்தா அணி வெற்றி பெற 112 ரன்களை பஞ்சாப் அணி இலக்காக நிர்ணயித்தது. அதனைத் தொடர்ந்து 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கொல்கத்தா அணி களம் இறங்கியது. இருப்பினும் கொல்கத்தா அணி 15 ஓவர்கள் 1 பந்துகளில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 95 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக அன்கிரிஷ் ரகுவன்ஷி 29 பந்துகளில் 37 ரன்களை குவித்தார். அன்ரே ருஸ்சல் 11 பந்துகளில் 17 ரன்களை குவித்தார். மேலும் ராகானே 17 பந்துகளில் 17 ரன்களையும் எடுத்தார். எனவே கொல்கத்தா அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. மேலும் இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதைச் பஞ்சாப் அணியின் வீரர் யுஸ்வேந்திர சாஹல் வென்றார்.
இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ள பஞ்சாப் அணி 4 போட்டிகளில் வெற்றியையும், 2இல் தோல்வியைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அதே சமயம் கொல்கத்தா அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 3 போட்டியில் வெற்றியையும், 4இல் தோல்வியைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.