



இராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடற்கரை மிகவும் நீண்ட பகுதி. இப்பகுதியில் தொடர்ந்து இலங்கைக்கு மஞ்சள், பீடி மருந்து பொருட்கள், கஞ்சா உள்ளிட்டவை கடத்தப்பட்டு வந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக சந்திஷ் பொறுப்பேற்றவுடன் சில மாதங்களில் கடத்தல்காரர்களை கட்டுக்குள் கொண்டு வந்தார். இந்நிலையில் பீடி மஞ்சள் புகையிலை மருந்து பொருட்களை கடத்திக் கொண்டிருந்தவர்கள் தற்சமயம் ஒரு படி மேலே சென்று கொகையின் போன்ற உயர்ரக போதை பொருளை கடத்தும் நிலைமைக்கு வந்துவிட்டனர்.
தற்சமயம் காவல்துறை கண்ணிலே மண்ணைத் தூவி விட்டு கடத்தல் வெகுஜோராக நடைபெற்று வருவதாக கூறுகின்றனர் கடற்கரை பகுதியைச் சேர்ந்த மக்கள். வேலியை பயிரை மேய்ந்த கதையாக சாயல்குடி வனத்துறையில் வனகாப்பாளராக பணிபுரியும் மகேந்திரன் என்பவர் துணையுடன் ஆறு கோடி மதிப்புள்ள போதை பொருளை சென்னையில் விற்க சென்றனர். அப்போது மாநில போதை பொருள் தடுப்பு பிரிவு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பரங்கிமலை பகுதியில் பதுங்கி இருந்த 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ போதைப் பொருளை கைப்பற்றி விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் தெரிவித்த தகவலின் படி கோயம்பேடு பகுதியில் பதுங்கி இருந்த போதை பொருள்கும்பலை சேர்ந்த 3 பேரை கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ஒரு கிலோ கொகைன் போதை பொருளை கைப்பற்றி விசாரணை மேற்க்கொண்டனர்.
அதில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சப்புளி கடற்கரை பகுதியில் பாலீதீன் கவரில் பேக் செய்யப்பட்ட பவுடர் போல் உள்ளது என பாண்டி என்ற நபர் வனத்துறையில் பணிபுரியும் உறவினரான மகேந்திரன் என்பவரிடம் கொடுத்துள்ளார். அவரோ தனக்கு வேண்டிய கீழக்கரை முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் ஹாஜா மொய்தீனிடம் கொடுத்து சென்னையில் விற்பனை செய்ய முயன்ற போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கீழக்கரை முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் ஹாஜா மொய்தீன் தற்சமயம் அ.தி.மு.க.வில் நகர செயலாளர் பதவி வேண்டும் என்பதற்காக 10 லட்ச ரூபாய் வரை கொடுக்கப்பட்டதாக ஒரு தகவல் உள்ளது. மேலும் இந்த போதை பொருள் கடத்தல் தொடர்பாக முகமது முபாரக், பழனீஸ்வரன், காசிம், எட்வர்ட்ஷாம், முகமது இத்ரிஸ் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து ஆறுகோடி மதிப்புள்ள கொகையின் போதை பொருளை கைப்பற்றினர்.
சில நாட்களுக்கு முன்பாக ராமேஸ்வரம் வந்திருந்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தபோது அதிகாரவர்க்கத்தின் துணையுடன் ராமநாதபுரம் மாவட்டம் கடத்தல் கேந்திரமாக மாறி உள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் 6 கோடி மதிப்புள்ள போதை பொருளை வனத்துறை அதிகாரி உடன் கடத்தியது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.