அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக சார்பாக செந்தில்பாலாஜி, அதிமுக வேட்பாளராக செந்தில்நாதன், அமமுக சார்பில் சாகுல்ஹமீது ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இன்று காலை அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள தோட்டக்குறிச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி,
அரவக்குறிச்சி தொகுதி வாக்குச்சாவடிகளில் காவல்துறை உயர் அதிகாரிகள் முதற்கொண்டு கீழ்நிலை வரை அந்தெந்த பகுதிகளுக்கு சென்று திமுகவினரை பணி செய்ய விடாமல் தடுக்கின்றனர். விதிமுறைக்கு உட்பட்டு 200 மீட்டர் தொலைவிலேயே பட்டா இடத்தில் டேபிள் சேர் போட்டு திமுகவினர் அமர்ந்துள்ளனர். அதனையும் போலீசார் தடுக்கின்றனர். முழுக்க முழுக்க அரவக்குறிச்சி இடைத்தேர்தலை காவல்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டிருக்கின்றன.
விதிமுறையில் என்ன உள்ளதோ, அதனைத்தான் செய்கிறோம். விதிமுறையில் எந்த அரசியல் கட்சித் தலைவர்கள் புகைப்படமும் இடம் பெறக்கூடாது என்று இருக்கிறது. வேட்பாளர் படம், வேட்பாளர் சின்னம் இடம் பெறலாம் என்று இருக்கிறது. ஆனால் அதனையே வைக்கக்கூடாது என்கிறார்கள். ஆனால் ஆளும் கட்சியினர் அவர்கள் கட்சி தலைவர்கள் புகைப்படம், சின்னமும் போட்ட ப்ளக்ஸ் வைத்துள்ளனர். அவர்களுக்கு ஒரு நீதியும், எங்களுக்கு ஒரு நீதியுமாக காவல்துறை நடந்துகொண்டிருக்கிறது. அரவக்குறிச்சி தேர்தல் அலுவலரிடம் நாங்கள் முறையிட்டோம். அதற்கு அவர், நான் காவல்துறையிடம் சொல்லத்தான் முடியும், நான் என்ன செய்ய முடியும் என்ற கருத்தை அவர்கள் சொல்லுகிறார்கள்.
முழுக்க முழுக்க தேர்தல் அதிகாரியையும் தாண்டி காவல்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்து அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுத்தி வருகிறது. ஆளும் கட்சி வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். மக்களை அச்சுறுத்தலாம், துன்புறுத்தலாம், காவல்துறை ஓட்டுப்போடப்போவதில்லை. போலீசார் எப்படி நடந்து கொண்டார்கள் என்று மக்களை கேட்டுப்பாருங்கள். சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி தேர்தலை நிறுத்த ஆளும் கட்சி முயற்சி மேற்கொள்கிறது. அதற்கு நாங்கள் எந்த இடமும் கொடுக்க மாட்டோம்.
இந்த தேர்தலில் ஆளும் கட்சிக்கு எப்படியாவது சாதகமாக செயல்பட வேண்டும் என்று காவல்துறை நினைக்கிறது. அதற்காக முனைப்போடு செயல்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.