கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி 224 தொகுதிகளைக் கொண்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டன. நாளை தேர்தல் எனும் நிலையில், நேற்றுடன் அங்கு தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது.
ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் பாஜகவும் மீண்டும் கர்நாடகத்தில் ஆட்சி அமைக்கும் முனைப்பில் காங்கிரஸ் கட்சியும் முனைப்பு காட்டின. நாளை தேர்தல் என்பதால் கர்நாடகத்தில் அரசியல் களம் இன்னும் சூடாகவே உள்ளது. எதிர்க்கட்சியினர் ஆளும் பாஜக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பொதுத்திட்டங்களில் பாஜக 40% ஊழல் செய்வதாக எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் கர்நாடக ஒப்பந்ததாரர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பாஜகவின் 40% ஊழலால் மக்கள் ஆபத்தான கட்டமைப்புகளில் வாழ்கின்றனர் எனக் குற்றம் சாட்டியுள்ளது.
குற்றச்சாட்டுகளுக்கு பாஜக மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் ஒப்பந்ததாரர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை, எதிர்க்கட்சிகள் வைத்த குற்றச்சாட்டுகளை உறுதி செய்கிறது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் 10-மே-2023 அன்று நடைபெறவுள்ளது. நமது மாநிலத்தில் ஊழல் அச்சுறுத்தும் நிலையை எட்டியுள்ளது. பா.ஜ.க. ஆட்சியில் அரசு ஒப்பந்தங்களுக்கு பெறப்பட்ட 40% கமிஷனால் பல உயிர்கள் பறிபோய்விட்டன; மக்கள் உயிருக்கு ஆபத்தான கட்டமைப்புகளில் வாழவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது; மக்கள் மனசாட்சிப்படி வாக்களித்தால் ஜனநாயகம் மலரும். ஊழல் மக்களின் மனசாட்சியை வெகுவாக பாதிக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பாஜகவிற்கு எதிராக வந்துள்ள நிலையில் தற்போது ஒப்பந்ததாரர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை பாஜகவிற்கு பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.