தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு, பால் ஆகியவற்றை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உடனே இயல்பு நிலைக்கு திரும்ப அரிசி, பருப்பு, பால், மளிகை பொருட்களை வழங்க வேண்டும். தேவையான மருத்துவ வசதிகளையும் உடனடியாக தமிழக அரசு கொடுக்க வேண்டும். அண்டை மாநிலங்களில் இருந்து உடனடியாக பால் கொள்முதல் செய்து தங்கு தடையின்றி பால் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் சிறப்பு முயற்சி எடுத்து உடனடியாக நீரை அகற்ற வேண்டும். வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
மழை நீர் வடிகால் பணிகள், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடக்கும் இடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை அரசு வெளியிட வேண்டும். திமுக அரசு முழு அளவில் மீட்புப் பணியை மேற்கொள்ளாமல், நிவாரண உதவிகளை வழங்காமல் உள்ளது. மழைநீர் வடிகால் பணி முடிந்த ஒவ்வொரு இடத்துக்கும் செலவிட்ட தொகை கணக்கை தர தயாரா? சென்னையில் உள்ள 38,500 பிரதான சாலைகளின் 20,000 சாலைகளின் இப்போது வரை வெள்ளம் தேங்கியுள்ளது. மழைநீர் வடிகால் பணி முடிந்த இடங்களில் கால்வாய்களை சரியான முறையில் இணைக்க அரசு தவறிவிட்டது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.