இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம், 'எடப்பாடி பழனிசாமி மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சு., ''ஏற்கனவே கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னால் எடப்பாடி பழனிசாமி இதே அறிக்கையை அச்சு மாறாமல் வெளியிட்டார். அச்சு மாறாமல், எழுத்து மாறாமல், வார்த்தை மாறாமல் மீண்டும் ஒரு நான்கு மாதங்களுக்குப் பிறகு இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
பல்வேறு வகைகளில் அனைவராலும் பாராட்டப்பட்ட இந்த திட்டத்தின் முதல் பெட்டகம் கிருஷ்ணகிரியில் சரோஜா அம்மாள் என்ற சகோதரிக்கு தரப்பட்டது. ஒரு கோடியே ஒன்றாவது பயனாளி என்ற வகையில் திருச்சிக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய சன்னியாசிப்பட்டி என்கின்ற கிராமத்தில் மீனாட்சி அம்மாள் என்ற சகோதரிக்கு முதல்வரே நேரில் பெட்டகத்தை தந்தார். முதல் பயனாளிக்கும் முதலமைச்சர் மருந்து பெட்டகத்தை தந்தார். 50 லட்சமாவது பயனாளிக்கும் முதல்வர் மருந்து பெட்டகத்தை கொடுத்தார்.
இதுவரை இல்லாத வகையில் முதலமைச்சரே நேரில் சென்று ஓராண்டு காலத்தில் மூன்று முறை திட்டத்தின் சிறப்புக்கு, திட்டத்தின் வெற்றிக்கு நேரடியாக வந்து குறிப்பாக கிராமங்களுக்கே நேரடியாக வந்து மருந்து பெட்டகங்களை தந்திருக்கிறார். ஒரு கோடி பயனாளிகளின் பெயர்கள் டிபிஎச் அலுவலகத்தின் வளாகத்திலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் எவ்வளவு பேர் இதில் பயனாளர்களாக இருக்கிறார்கள் என்கின்ற பட்டியல் இருக்கிறது. இது மிகப்பெரிய திட்டம். அதை செயல்படுத்தும்போது மிகப்பெரிய சவால்கள் இருக்கத்தான் செய்யும். இதற்காக ஏற்கனவே 7,428 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
காடுமேடு என அலைந்து மலை கிராமங்களுக்கும் மக்களை தேடி மருத்துவம் என்கின்ற திட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் யாரும் போகாத கிராமங்களுக்கும் தேடிச் சென்று மருத்துவ திட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதைப் புரிந்து கொள்ளாமல் அல்லது இந்த திட்டத்தின் செயல்பாட்டை அறிந்து கொள்ளாமல் இதுபோன்ற அரைவேக்காட்டுத்தனமான அறிக்கைகளை வெளியிடுவது என்பது மிகப்பெரிய அபத்தமான செயலாக இருக்கிறது. அவர் விரும்பினால் டிபிஎச் அலுவலகத்தில் ஒரு கோடியே ஒரு பயனாளிகளின் பட்டியலை அவருக்குத் தரத் தயாராக இருக்கிறோம். வந்து பார்க்கத் தயாராக இருந்தால்''என்றார்.