அரவக்குறிச்சி இடைத்தேர்தல் நாளுக்கு நாள் பெரிய பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் கடுமையாக போட்டி போட்டுக்கொண்டு பிரச்சாரம் செய்துவருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதத்தில், சட்டசபை பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம், உச்சகட்டத்தில் இருந்தது. அப்போது, அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜி போட்டியிடும்போது அன்புநாதன் வீட்டில் இருந்து 4.77 கோடி ரூபாய் மற்றும் குடோனில் இருந்து 10 லட்சத்து 33 ஆயிரம் ரூபாயை, வருமான வரி துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அத்தோடு ஆம்புலன்ஸ் வண்டியில் பணத்தை கட்டுக்கட்டாக கடத்தியபோதும் சிக்கினார். அப்போது அதிமுக தலைமை, கடுமையான நெருக்கடியை சந்தித்தது. இதில் சீனியர் அமைச்சர்கள் பலருக்கு பதட்டத்தை உண்டாக்கியது. குறிப்பாக அதிமுக அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம் என ஏகப்பட்ட சீனியர்களுடன் நேரடி தொடர்பில் அன்புநாதன் இருந்ததால் தன்னுடைய தலை உருளுமோ என்கிற பயம் அனைவரையும் தொற்றிக்கொண்டது.
இந்த ரைடுக்கு செந்தில்பாலாஜிதான் காரணம் என்கிற ரீதியில் அப்போது இருந்தே எதிரும் புதிருமாக இருந்தனர். ரைடுக்கு பிறகு தலைமறைவு, ஜாமீன் என பரபரப்பாக இருந்தாலும் இந்த பிரச்சனைக்கு பிறகு கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடாமல், அன்புநாதன் ஒதுங்கியே இருந்தார்.
சமீபத்தில் இவருடைய இல்ல திருமணமத்தில் அதிமுகவினர் நேரடியாகவும், திமுகவினர் மறைமுகமாகவும் சென்று வந்தனர். அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், வரும், 19ம் தேதி, அரவக்குறிச்சி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இதில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் செந்தில்நாதனை ஆதரித்து, முதல்வர், எடப்பாடி பழனிசாமி வேலாயுதம்பாளையத்தில் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது அ.தி.மு.க.,வினருடன், அன்புநாதன் நின்று கொண்டிருந்தார். அங்கிருந்த அமைச்சர் தங்கமணி, நாமக்கல், எம்.பி., சுந்தரம் ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தவர். பிரச்சாரத்திற்கு முதல்வர் பழனிசாமி வருவதற்கு முன்னதாகவே அங்கிருந்து கிளம்பிசென்றுவிட்டார்.