தோ்தல் என்றாலே கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிப் பங்கீடு பெரிய தலைவலியாக இருக்கும். பின்னர் கட்சியில் யாருக்கு சீட் கொடுக்க வேண்டும், யாருக்கு கொடுக்க கூடாது, யார் யாரை ஆதரிக்கிறார்கள், அவருக்குத் தரலாமா, அவருடைய சாதி என்ன, அவா் தொகுதிக்கு செலவு செய்வாரா என்ற பல கட்ட கேள்விகளுக்குப் பிறகு தலைமை அறிவிக்கும் இறுதி முடிவுவரை காத்திருக்கும் நிலை எல்லா கட்சியினருக்கும் பொதுவானதுதான்.
தற்போது அப்படிப்பட்ட சூழல் அதிமுகவில் நிலவியுள்ளது. ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் இடையில் தங்களுடைய ஆதரவாளர்களுக்கு சீட் கொடுப்பதில் மோதல் நிலவி வருகிறது. உதாரணமாக, மேட்டூா் தொகுதியில் செம்மலைக்கு மீண்டும் எம்.எல்.ஏ சீட் கொடுக்க முடியாது என்று இ.பி.எஸ். பிடிவாதம் பிடிக்கிறார் என்றும், அதற்கு காரணம், அவர் ஓபிஎஸ்ஸின் ஆதரவாளராக இருப்பதுதான் என்றும் சொல்லப்படுகிறது.
அதேபோல் ஓபிஎஸ்ஸூம், எடப்பாடி பழனிசாமியின் வலது கரமாக இருக்ககூடிய சேலம் இளங்கோவிற்கு சீட் கொடுக்க கூடாது என்று வலியுறுத்தி வருகிறாராம். இந்த சண்டைதான் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது என்கிறார்கள் அதிமுகவில் மேலிடத்தில் தொடர்பில் இருப்பவர்கள்.
அதிமுகவில் பல எம்எல்ஏக்களின் சீட்டுகளுக்கு, ஓபிஎஸ்ஸின் முன்னாள் ஆதரவாளா்களுக்கும், தற்போது ஆதரவாளா்களாக இருப்பவா்களுக்கும் சீட் கொடுக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் இ.பி.எஸ். உறுதியாக இருப்பதாகவும், அதேபோல் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளா்களுக்கு சீட்டு கொடுக்க கூடாது என்பதில் மிக ஓபிஎஸ் கவனமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்கள் மோதலால் விருப்ப மனு அளித்தவர்களான அதிமுக விஐபிக்கள் அனைவரும் உச்சக்கட்ட குழப்பத்தில் உள்ளனர். அவர்களோடு தற்போதுள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்ற குழப்பத்திலும் உள்ளனர்.
இந்த மோதல் நீடிப்பதால்தான் இன்றுவரை வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படாமல் உள்ளது என்றும், இந்த மோதலை இன்று (09.03.2021) இரவுக்குள் பேச்சுவாரத்தை நடத்தி தீா்வு கண்டு, உடனடியாக இன்று இரவே வேட்பாளா் பட்டியல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிமுக மேல்நிலை வட்டாரங்கள் கூறுகின்றனா்.