விசிக தலைவர் திருமாவளவன் தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது வேங்கைவயல் பிரச்சனை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்து பேசிய அவர், ''புலனாய்வில் அதிகாரிகளுக்கு இருக்கின்ற தேக்கம்; அந்த தேக்கத்திற்கான காரணம் என்ன என்பது நமக்கு தெரியவில்லை'' எனப் பேசிக் கொண்டிருந்த பொழுது, செய்தியாளர் ஒருவர், ''திமுககாரர் போல் பதில் சொல்லாதீர்கள்'' எனச் சொல்ல, அதற்கு திருமாவளவன் சற்று ஆவேசமானார்.
''இந்த மாதிரி பேசுகின்ற வேலை எல்லாம் நீங்கள் வேறு யாருகிட்டயாவது வச்சிக்கோங்க. இதெல்லாம் நாகரீகம் இல்லாத பேச்சு. உங்களுக்கும் ஒரு நாகரிகம் வேண்டும். நாகரீகம் தவறி பேசாதீர்கள். உண்மையை பற்றி கேள்வி கேளுங்கள். உங்கள் கருத்தை திணிக்காதீர்கள். ஊடகவியலாளர்களுக்கு என்ன மரியாதையோ அந்த மரியாதையை கொடுக்கின்ற அளவுக்கு கேள்வி இருக்க வேண்டும். திமுகவை எதிர்த்து எங்களை மாதிரி போராட்டம் யாரும் நடத்தியதில்லை. தலித்துகள் பிரச்சனைக்காக இதுவரை இந்த இரண்டு ஆண்டுகள் 10 போராட்டங்கள் நடத்தி இருக்கிறோம். நாளை கிருஷ்ணகிரியில் போராட்டம் நடத்தப் போகிறோம். திமுக கூட்டணியில் இருப்பதால் அநாகரீகமாகப் பேசக்கூடாது. எல்லாம் அரசு செய்யும்'' என்றார்.
மீண்டும் அந்த செய்தியாளர், “திமுககாரர்கள் சொல்கின்ற பதிலையே நீங்கள் சொல்கிறீர்கள் என்று சொன்னேன்” எனச் சொல்ல, ''அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது என்ன காரணம் என்று நீங்கள் சொல்லுங்கள்'' என செய்தியாளர்களை நோக்கி கேள்வி எழுப்பிய திருமாவளவன், “ஊடகவியலாளர்கள் முன்னிலையில் குனிந்து பேச வேண்டுமா? கையைக் கட்டிக்கொண்டு பேச வேண்டுமா? அவர் என்னை திமுககாரன் என்று கை நீட்டுகிறார். இதையெல்லாம் மற்றவர்களிடம் வைத்துக் கொள்ளுங்கள். என்னிடம் விசயம் சார்ந்த எந்த கேள்விகளை வேண்டுமானாலும் கேளுங்கள்'' என்றார்.