Skip to main content

புதிய பொறுப்பு; யாத்திரை நடக்குமா? - அண்ணாமலை விளக்கம்

Published on 04/02/2023 | Edited on 04/02/2023

 

April Pilgrimage of Annamalai;

 

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பாஜக தலைமையிலிருந்து கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

கர்நாடக மாநிலத்தில் மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியைத் தக்க வைக்க ஆளும் பாஜகவும், ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகளும் தீவிரமாகக் களப்பணியாற்றி வருகின்றனர். அந்தந்த கட்சித் தலைவர்கள் கர்நாடக மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக கர்நாடக மாநில பாஜக மேலிட இணைப் பொறுப்பாளராகத் தமிழ்நாட்டின் பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மாநிலத்தின் மேலிடப் பொறுப்பாளராக மத்திய கல்வித்துறை அமைச்சர் தெர்மேந்திர பிரதான் நியமிக்கப்பட்டுள்ளார் என பாஜக தலைமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

பாரதிய ஜனதா கட்சிக்கான கட்டமைப்பில் ஒரு மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் பொழுது அந்த மாநிலத்தின் தேர்தல் பணிகளைக் கண்காணிப்பதற்கும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கும், அருகில் உள்ள மாநிலங்களில் இருக்கும் பாஜகவினர் மேலிடப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவார்கள். தமிழகத்திற்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மேலிடப் பொறுப்பாளராக சி.டி. ரவி உள்ளார். தமிழகத்தில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவை வழி நடத்தவும், பாஜக சார்பில் பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது உள்ளிட்ட செயல்களை மேலிடப் பொறுப்பாளர்கள் தான் மேற்கொள்வார்கள்.

 

மேலும் அண்ணாமலை, கர்நாடக மாநிலத்தில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றியதும் அம்மாநில அரசியல் குறித்து அண்ணாமலை அறிந்து வைத்திருப்பார் என்பதாலும் இப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “வேலைப் பளு மறுபடியும் அதிகரித்துள்ளது. கர்நாடகத் தேர்தலில் மத்திய அமைச்சருடன் இணைந்து பணியாற்றும் படி சொல்லியுள்ளனர். பாஜக மீண்டும் வெற்றி பெறும் என்று நம்பிக்கை உள்ளது. நாம் ஒன்று நினைக்கும் போது கடவுள் ஒன்று நினைக்கின்றான். அதனால் கர்நாடகத்தில் கொடுத்துள்ள வேலைகளையும் செய்ய வேண்டும். நாம் திட்டமிட்டுள்ள யாத்திரையையும் ஆரம்பிக்க வேண்டும். கூட்டணிக் கட்சி வேட்பாளரையும் வெற்றி பெற வைக்க வேண்டும். எவ்வளவு சக்தி உள்ளதோ அத்தனையும் செய்வோம்” எனக் கூறினார்.

 

ஏப்ரல் மாதத்தில் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் யாத்திரை மேற்கொள்ளப்போவதாக அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்