Skip to main content

போதுமான நேரம் ரஜினிக்கு இருக்கிறதா? 48 மணி நேரத்தில் கட்சி, சின்னம் பெற முடியுமா?

Published on 21/12/2020 | Edited on 21/12/2020
rrr

 

தேர்தல் ஆணையத்திடம் ஆட்டோ சின்னத்தைப் பெற்றிருக்கும் மக்கள் சேவைக் கட்சியை, ரஜினி தத்தெடுத்துக்கொள்ளப் போகிறார் என்று பரபரப்பாகச் செய்திகள் அடிபட, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகமோ வெயிட் பண்ணுங்கன்னு ரசிகர்களுக்குச் சொல்லியிருக்கிறது.

 

1996-தேர்தலின்போது கடைசி நேரத்தில் காங்கிரசிலிருந்து வெளியேறி, த.மா.கா.வை உருவாக்கிய மூப்பனார், 48 மணி நேரத்தில் கட்சியைப் பதிவு செய்து, சைக்கிள் சின்னத்தையும் வாங்கினார். இதற்கு சட்ட ரீதியாக உழைத்தவர் ப.சிதம்பரம். அவருக்கு உறுதுணையாக இருந்து கட்சியைப் பதிவு செய்து கொடுத்தது அப்போதைய தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன். ஆனால், அப்படிப் பட்ட சூழல் இப்போது இல்லை.

 

தேர்தல் ஆணையத்தில் ஒரு கட்சியைப் பதிவு செய்யவே, 6 மாத காலம் ஆகிறது. கட்சியின் தலைமையகம் செயல்படும் இடம், கட்சியின் சட்ட திட்டம், கட்சிக்காகத் தாக்கல் செய்யப்படும் 100 பேரின் பிரமாண பத்திரங்கள் உள்ளிட்டவைகளை சரிபார்க்கத்தான் இவ்வளவு காலம் ஆகிறது. இதனால் தேர்தலுக்கு முன்பாக தனது கட்சியைப் பதிவு செய்வதற்கு போதுமான நேரம் ரஜினிக்கு இல்லை. அதனால்தான் மக்கள் சேவைக் கட்சியை ரஜினி தத்து எடுக்கப்போகிறார்ன்னு டாக் அடிபடுது.

 

அது யாருடைய கட்சி? 

தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற தலைவர் ஸ்டாலின் என்பவர் பதிவு செய்து வைத்திருக்கும் கட்சி அது. ஏற்கனவே தனது கட்சியில் அகில இந்திய என்கிற வார்த்தைகளை இணைத்தே பதிவு செய்திருந்த அவர் கடந்த செப்டம்பரில், அதனை மக்கள் சேவை கட்சி என மாற்றியிருக்கிறார். அந்த கட்சிக்கு எர்ணாவூர் முகவரி கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த இடம் இப்போது வீட்டு வாடகைக்கு விடப்பட்டிருக்கிறதாம். ஸ்டாலின் மீது சில வழக்குகள் பெண்டிங்கில் இருப்பதை உளவுத்துறை சேகரித்திருக்கிறதாம். பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். நண்பர்களோடு இணைந்து நாக்பூரில் சில பிஸ்னெஸ்களையும் இவர் நடத்தி வருகிறாராம். தனது பிஸ்னெஸ்சில் இருக்கும் ஊழியர்கள் பலரையும் பிரமாணபத்திரம் கொடுக்க வைத்திருக்கிறார்.

 

இந்தக் கட்சியைத் தனது கட்சியாக ரஜினி அறிவிக்க முடியுமா?

இந்த கட்சியை ரஜினி எடுப்பதாக இருந்தால், அதில் அவர் உறுப்பினராகச் சேர வேண்டும். அதன்பிறகு அக்கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி, கட்சியின் பொதுச் செயலாளராகவோ, தலைவராகவோ அவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அப்புறம் தான், அந்த கட்சி ரஜினிக்கு உரியதாக மாறும். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் நடப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இதுவரை தென்படவில்லை. ரஜினியின் கட்சி தொடங்குவதற்கு முன்பு இத்தனை சிக்கல்களா என்று ரசிகர்களும் மன்றத்தினரும் கவலைப்படுகிறார்கள். ஆனால் ரஜினியோ இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல், தன்னோட ஸ்டைலில், "அண்ணாத்தே' பட ஷூட்டிங் கிற்குக் கிளம்பிப் போய்விட்டார்.

 

படப்பிடிப்பையொட்டி ஹைதராபாத்துக்கு சென்னையிலிருந்து தனியார் விமானத்தில் ரஜினி புறப்பட்டுச் சென்றார். அப்போது விமானத்தில் அவரது பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடியிருக்கிறார். இதன் வீடியோ பதிவுகள் ரகசியமாகப் பகிரப்பட்டு வருகின்றன. அந்த பதிவு மத்திய உள்துறையின் கவனத்துக்குப் போக, இப்படியொரு கொண்டாட்டத்தை எப்படி அனுமதிக்கலாமென்று விமான போக்குவரத்துறையிடம் விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறதாம். விமான போக்குவரத்துத் துறையோ, சம்மந்தப்பட்ட தனியார் விமான நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்