சேலம் மாவட்டம் ஏர்வாடி வாணியம்பாடி பகுதியில் உள்ள அம்மா மினி கிளினிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசும்போது, வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அரசைக் குற்றம் சாட்டுகிறார். அவர் வீடியோ கான்ஃபரன்சில் கட்சியினரிடம் பேசிக்கொண்டிருக்கிறார். நாங்கள் நேரடியாக, மக்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
கரோனா வைரஸ் கொடூரமான வைரஸ் தொற்று. கடுமையான நோய். எளிதாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவக்கூடிய நோய். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொரு துறைகளிலும் என்ன என்ன நன்மைகள் மக்களுக்குக் கிடைக்குமோ அந்த நன்மைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால், தி.மு.க அப்படியா இருக்கிறது. தான் குடும்பம், தான் வாழ வேண்டும் என்று எண்ணுகிற ஒரே கட்சி திமுகதான்.
ஆனால். அ.தி.மு.கவில் அப்படி இருக்காது. உழைக்கின்றவர்கள் பதவிக்குவர முடியும். விசுவாசமாக இருக்கிறவர்கள் உயர்ந்த நிலைக்கு வரமுடியும். ஏனென்று சொன்னால் உழைக்கிறவர்களைத்தான் மக்கள் மதிப்பார்கள். அப்படி, மதிக்கக்கூடிய கட்சி அ.தி.மு.க., அ.தி.மு.க அரசு. ஆகவேதான் இந்த இயக்கத்தை உடைக்க முயற்சித்தார்கள். கவிழ்க்க முயற்சித்தார்கள். மக்களின் துணையோடு இரண்டும் முறியடிக்கப்பட்டது என்றார்.