தமிழகத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்த பிரதான கட்சியின் மாவட்டச் செயலாளர் ஒருவர், ‘வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் எங்கள் கட்சி தனித்துப் போட்டியிடும்’ என்று செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார் என்றால், அது அந்தக் கட்சித் தலைமையின் ‘இசைவு’ இல்லாமல் தன்னிச்சையாகவா நடந்திருக்கும்? என்ற கேள்வி எழத்தானே செய்யும்.
விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளர், செய்யது காஜா செரீப் தலைமையில் ராஜபாளையத்தில் நடந்த செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில்தான், இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, விஜயகாந்தை முதல்வராக்க வேண்டும் என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
கடந்த 2019-ல், அ.தி.மு.க தலைமையில் பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து, நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தன. இந்நிலையில், அ.தி.மு.க. கூட்டணியை முறித்துவிட்டு, தனித்துப் போட்டியிடுவோம் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருந்தபோது, “நீங்க ரெண்டு பக்கமும் பேசுறீங்க. இன்னைக்கு ஒண்ணு; நாளை ஒண்ணு சொல்றீங்க. உங்களை எப்படி நம்புறது?” என்று பேச்சு வார்த்தைக்கு வந்தவர்களிடமே கேட்டு, அந்த விஷயத்தைப் பொதுவெளியிலும் போட்டு உடைத்தார், அன்றைய தி.மு.க பொருளாளரான துரைமுருகன். அதனால், அரசியல் களத்தில் தே.மு.தி.க. மீதான நம்பகத்தன்மையே கேள்விக்குறியானது.
இந்த நிலையில், தனித்துப் போட்டியிடும் அளவுக்கு, கடந்த 20 மாதங்களில் தே.மு.தி.க. புத்துயிர் பெற்று, வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறதா என்பதைப் பார்ப்போம்!
2009 -நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நின்று, 10 சதவீத ஓட்டுக்களைப் பெற்றது தே.மு.தி.க. 2019 நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி அமைந்தாலும், போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் தோல்வியடைந்து, 2.19 சதவீத வாக்குகள் மட்டுமே தே.மு.தி.க-வுக்கு கிடைத்தன.
2005-ல் உதயமான தே.மு.தி.க., முதன் முறையாக 2006-ல், சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் சுமார் 27,64,000 வாக்குகள் கிடைத்தன. இது மொத்த வாக்கில் 8.33 சதவிகிதம்.
பிறகு, 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தே.மு.தி.க பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இரண்டு கூட்டணிகளையும் எதிர்த்து 39 தொகுதிகளில். தனித்து நின்றது தே.மு.தி.க. பெரும்பாலான தொகுதிகளில், தே.மு.தி.க வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்று, மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். அந்தத் தேர்தலில் 30,73,479 ஓட்டுகள் வாங்கியது. இது பதிவான மொத்த வாக்குகளில் 10.1 சதவீதமாகும்.
மொத்தத்தில் அந்தத் தேர்தலில், 25 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக இருந்தது தே.மு.தி.க. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், விருதுநகர், சேலம், திருவள்ளூர், ஆரணி, தருமபுரி, காஞ்சிபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட 9 தொகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது அக்கட்சி.
தே.மு.தி.க. பிரித்த வாக்குகளால், அ.தி.மு.க கூட்டணி 13 இடங்களிலும், தி.மு.க கூட்டணி 11 தொகுதிகளிலும், பா.ஜ.க. பொன்.ராதாகிருஷ்ணனும் தோல்வியைத் தழுவினர். வைகோ, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மணிசங்கர அய்யர், ஏ.கே.மூர்த்தி, தங்கபாலு, தா.பாண்டியன், சாருபாலா தொண்டைமான் போன்றோரை அப்போது நாடாளுமன்றத்திற்குச் செல்லவிடாமல் தடுத்ததில் தே.மு.தி.க.வின் பங்களிப்பு அதிகம்.
விருதுநகரில் போட்டியிட்ட வைகோ, வெறும் 15 ஆயிரத்து 764 வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வி அடைந்தார். ஆனால், அந்தத் தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தே.மு.தி.க வேட்பாளர் மாஃபா பாண்டியராஜன் 1,25,229 வாக்குகள் பெற்றார்.
2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி சார்பில் 14 தொகுதிகளில் போட்டியிட்டது தே.மு.தி.க. இதில், திருப்பூரில் 2-வது இடத்தையும், மற்ற தொகுதிகளில் மூன்றாம் இடத்தையும் பிடித்தது அந்தக் கட்சி. மொத்தம் 5.2 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. இது 2009-தேர்தலில் பெற்ற வாக்குகளில் பாதிதான்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணியில் 4 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க., நான்கிலும் தோல்வியைத் தழுவியது. மொத்தம் உள்ள 4 தொகுதிகளிலும் சேர்த்து 9,29,590 வாக்குகள் மட்டுமே பெற்றது. இது, பதிவான மொத்த வாக்கு சதவிகிதத்தில் 2.19 சதவீதம் ஆகும். ஆக, தே.மு.தி.க-வின் வீழ்ச்சியானது, 10 ஆண்டுகளில் 10 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகக் குறைந்தது. இதைக் கணக்கிடும்போது, 2009 தேர்தலில் 39 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டதையும், 2019-ல் 4 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் நலிவுற்றிருக்கும் நிலையில், அக்கட்சியும் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் சூழ்நிலையில், 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க.-வை தனித்துப் போட்டியிடச் செய்து, விஜயகாந்தை முதல்வராக்குவோம் என, ஒரு மாவட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்தச் செயல் வீரர்கள் கூட்டம், தே.மு.தி.க வளர்ச்சியை எந்த அளவுகோலால் அளந்ததோ? சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி பேரம் நடத்துவதற்கு, தனித்துப் போட்டி என்று இப்போதே கிலி கிளப்புவதுதான் சரியாக இருக்கும் என, மேலிடத்தின் எண்ண ஓட்டத்தை அறிந்து, இப்படியொரு தீர்மானம் நிறைவேற்றினார்களோ, என்னவோ? கேப்டனுக்கும், அந்தக் கட்சிக்கும்தான் வெளிச்சம்!