ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கொடியேற்று விழா ஈரோடு புதுமைக்காலனியில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்துகொண்டு கட்சி கொடியை ஏற்றினார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த இளங்கோவன்,
ராமதாஸ் தனது குடும்பத்தை சேர்ந்த யாருக்கும் பதவி அளிக்க மாட்டேன் என்று ஏற்கனவே கூறி இருந்தார். ஆனால் மத்திய மந்திரி பதவி வாய்ப்பு கிடைத்தபோது அவருடைய மகன் அன்புமணி ராமதாசுக்கு பதவியை பெற்று கொடுத்தார். 20 ஆண்டுகளாக அவர் கொள்கை என்று கூறி மக்களை ஏமாற்றி வருகிறார். நரேந்திரமோடிபோல் ராமதாசும் மக்களை ஏமாற்றுகிறார். எனவே ஜூனியர் மோடியாக ராமதாஸ் செயல்படுகிறார்.
இந்த கூட்டணியை பொறுத்தவரை பா.ம.க. அரசியல் தரகராக செயல்பட்டு உள்ளது. இது பா.ம.க. தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரதமர் நரேந்திரமோடி கியாஸ் மானியம் அளிப்பதாக கூறுகிறார். ஆனால் இதுவரை யாருக்கும் கியாஸ் மானியம் கிடைக்கவில்லை. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கொடுப்பதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இது ஒருநாள் டீ குடிப்பதற்குக்கூட காணாது.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து நின்றால்கூட டெபாசிட் பெற வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பா.ஜ.க., பா.ம.க.வுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவதால் டெபாசிட் கூட கிடைக்காது. தே.மு.தி.க.வை பொறுத்தவரை கூட்டணி இழுபறி இருந்து கொண்டேதான் இருக்கும். இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தே.மு.தி.க. காணாமல்போய் விடும். இவ்வாறு கூறினார்.