அண்மையில் சட்டப்பேரவை கூட்ட நிகழ்விற்கு பிறகு ஓபிஎஸ் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசியதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு ஒன்றை வைத்திருந்தார்.
இது குறித்து டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்த அவர், ''இதற்கு ஓ.பன்னீர்செல்வமே பதில் சொன்னதை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன். எடப்பாடி பழனிசாமி, நான் தமிழக முதல்வரை சந்தித்து அரை மணி நேரம் பேசியதாக சொல்லியிருப்பதை நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலக தயார். நிரூபிக்க முடியவில்லை என்றால் அவர் விலக தயாரா என கேட்டுள்ளார். முதலமைச்சரை ஒரு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பார்க்கக்கூடாதா? தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எந்த அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும் முதல்வரை சந்திப்பதில் தவறு ஒன்றும் கிடையாது.
சமீப காலமாகவே தொலைக்காட்சிகளில் பார்த்தீர்கள் என்றால் தெரியும், எடப்பாடி பழனிசாமி ஒரு நிதானமே இல்லாமல் கோப தாபத்தோடு, முதலமைச்சராக இருந்தவர், அவருடைய வயசுக்கு எப்படி எல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்ற பொறுப்பு இல்லாமல் பேசுகிறார். ஏதோ இளைஞர்கள் கோபப்பட்டார்கள் என்றால் பரவாயில்லை. எங்கள் வயசுக்கு நாங்களே கோபப்படுவதில்லை. அவர் வயசுக்கு காட்டுமிராண்டி மாதிரி பிஹேவ் செய்கிறார். அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி அருணா ஜெகதீசன் கொடுத்த அறிக்கை குறித்து தமிழக அரசு எந்த ஒரு பாரபட்சமும் இன்றி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதான் தூத்துக்குடி மக்களும், துப்பாக்கிச் சூட்டில் உயிர்நீத்தவர்களின் உறவினர்களும் வைக்கும் கோரிக்கை. அதை அரசு நிறைவேற்ற வேண்டும். தூத்துக்குடியில் நடந்தது என்னவென்று எல்லோருக்கும் தெரியும் அதனால் அருணா ஜெகதீசன் வெளியிட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால் ஆறுமுகசாமி ஆணையம் கொடுத்த அறிக்கை ஒரு அரசியல்வாதி எழுதிய அறிக்கை போல உள்ளது என தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் சொல்கிறார்கள். நான் மட்டும் சொல்லவில்லை. என் சித்தியை பாதுகாக்க நான் இப்படி சொல்லவில்லை'' என்றார்.