சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அந்த எப்.ஐ.ஆரில் ஞானசேகரன் யாரோ ஒருவரை ‘சார்’ எனக் குறிப்பிட்டு பேசியதாகக் கூறப்பட்டது. அந்த சார் யார்? என அதிமுக உள்பட எதிர்க்கட்சிகள் இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், தெலுங்கானா மாநில முன்னாள் துணைநிலை ஆளுநரான தமிழிசை செளந்தரராஜன் உள்பட பா.ஜ.க மகளிர் நிர்வாகிகள், இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்தனர். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழிசை செளந்தரராஜன், “அறிவிக்கப்படாத அவசர நிலை தமிழகத்தில் நிலவுகிறது. இதற்கு எங்களது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வழக்கை பொறுத்தவரை சிறப்பு புலனாய்வுக் குழுவில் கூட பாதிக்கப்பட்ட அந்த மாணவி, இன்னொரு சார் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என வலிமையாக பதிவு செய்திருக்கிறார் என்பதை நாங்கள் கேள்விப்படுகிறோம். அப்படியென்றால் அந்த சாரை ஏன் மறைக்கிறீர்கள்?. அந்த சார் யார்? என்பதை எங்களுக்கு தெரியவேண்டும். இந்த வழக்கு மட்டுமல்லாமல், ஆளும் திமுக அரசினால் தொடர்ந்து பெண்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக ஆளுநரிடம் தெரிவித்தோம். தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் கல்வி கற்கும் பல்கலைக்கழகத்திற்குள்ளே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. நிர்பயா நிதியை எப்படி செலவு செய்திருக்கிறீர்கள்?. இதில் இன்னும் பலவற்றை மறைக்க பார்க்கிறீர்கள்?.
இந்த சம்பவம் குறித்து முதல்வரோ, துணை முதல்வரோ ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை. எங்கோ ஒரு மாநிலத்தில் இது போன்று நடந்தால் உடனே முதல்வர் பேசுவார். ஆனால், தனது மாநிலத்தில் இப்படியொரு பிரச்சனை நடந்திருக்கிறது. ஏன் நீங்கள் வாயை திறக்கவில்லை?. திராவிட மாடல் அரசு, குற்றவாளிகளுக்கு உறுதுணையாக இருக்கிறது. போராடும் பெண் தலைவர்கள் கைதாகிறார்கள். ஆனால், கைதாக வேண்டிய குற்றவாளிகள் நடமாடுவார்கள். இது தான் திராவிட மாடல் அரசு” என்று கூறினார்.