28ஆம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் அனைவரும் பங்கேற்க வேண்டும். அரசின் திசை திருப்பும் முயற்சிக்கு வாய்ப்பு கொடுத்து விடக்கூடாது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கரோனா பேரிடர் காலத்தில் மக்களைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளில் கவனத்தைச் செலுத்தாமல், மத்திய அரசு புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்த தீவிரம் காட்டிக்கொண்டு இருப்பதை அனைவரும் அறிவோம். இந்தியா முழுவதும் கரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
கரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்க முடியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி பெரும் முதலாளிகளுக்கு நன்மை பயக்கும் மூன்று வேளாண் மசோதாக்களை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. இந்த வேளாண் மசோதாக்களுக்கு இரு அவைகளிலும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும் சர்வாதிகார போக்குடன் மத்திய பா.ஜ.க அரசு நிறைவேற்றி இருக்கிறது. இதைக் கண்டித்து இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் போராட்டக் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
கரோனாவினால் இந்தியாவே முடக்கப்பட்ட நேரத்திலும் விவசாயிகள் விவசாயத்தைக் கைவிடாமல் செய்த காரணத்தினால்தான் தட்டுப்பாடு ஏற்படாமல் அத்தியாவசிய பொருட்கள் அனைத்து மக்களுக்கும் கிடைத்தது. இப்படி நாட்டு மக்களுக்காக அனுதினமும் உழைக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கும் சூழ்நிலையை மத்திய அரசு ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில்தான் விவசாயிகளின் உரிமைக்காகப் போராட வேண்டிய கட்டாயம் நமக்கெல்லாம் உருவாகியிருக்கிறது.
மத்திய அரசின் விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து வருகின்ற 28-ஆம் தேதி திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த தி.மு.க தலைமையிலான நம் கூட்டணிக் கட்சிகள் முடிவெடுத்து, அதற்கான ஏற்பாடுகளை அனைத்துப் பகுதிகளிலும் உள்ள நிர்வாகிகள் ஒன்றிணைந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.
கரோனா பேரிடர் காலத்தில் இப்போராட்டம் நடைபெறுவதால், தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். கரோனா காலத்து கட்டுப்பாடுகளை நாம் கடைப்பிடிக்காமல் மீறுவோமா என்று மத்திய, மாநில அரசுகளும், உளவுத்துறையும் ஆவலோடு கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஏதாவது விதிமீறல்கள் நடந்தால் போராட்டம் நடத்துவதால் மக்கள் மத்தியில் வருகின்ற தாக்கத்தை, விழிப்புணர்வைத் திசை திருப்புகின்ற வகையிலே கரோனா பரவலுக்குக் காரணமாக நம் போராட்டம் இருந்தது என்று விளம்பரப்படுத்துவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். முழுமையாக நம் போராட்டத்தினுடைய தாக்கம் மக்களுக்கும், அரசுக்கும் சென்றடைய வேண்டுமென்றால் சிறு தளர்வுகள் கூட இல்லாமல் நாம் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
விவசாயிகளுக்காக நாம் நடத்தும் ஆர்ப்பாட்டம், அனைவருக்கும் முன் உதாரணமாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றியடைய செய்ய வேண்டுமென்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு கூறியுள்ளார்.