கரூர் எம்.பி. தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் தம்பிதுரை. இந்த முறையும் கரூர் தொகுதியில் போட்டியிடுகிறார். லோக்சபா துணை சபாநாயகராக இருந்த அவர், இந்த தேர்தலில் மூன்றாவது முறையாக ஹாட்ரிக் எப்படியும் ஜெயிக்க வேண்டும் என்று பணத்தை தண்ணீராக கட்சிகாரர்களுக்கு கொடுக்க திட்டம் தீட்டியிருக்கிறார் என்றும் 100 சி வரைக்கும் செலவு செய்ய முடிவு பண்ணியிருக்கிறார் என்றும் கூறுகின்றனர் அவருக்கு நெருக்கமான கட்சியினர்.
இந்த நிலையில் கரூர் எம்.பி. தொகுதிக்குட்பட்ட மணப்பாறை அருகேயுள்ள வையம்பட்டி அதிமுக ஒன்றிய செயலாளர் சேதுவின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ரூபாய் 50 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. மேலும் கரூரில் என்எஸ்என் கல்லூரி அதிபர் செல்வத்தின் வீடு மற்றும் அலுவலகங்கள் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் ரூபாய் 6 கோடி வரை பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை. வருமானவரித் துறையினரின் இந்த திடீர் சோதனை தம்பிதுரை தரப்பினருக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதுவும் தம்பிதுரைக்கு நெருக்கமானவர் மீது குறிவைத்து ரைடு நடத்தப்படுவது, ''நாம் ஜெயிக்க கூடாது என்று பிஜேபி தலைமை ஏதுவும் நினைக்கிறேதோ'' என்கிற சந்தேகம் வலுக்கிறதாம் தம்பிதுரை தரப்பில். பிஜேபி - அதிமுக கூட்டணி ஏற்படும் முந்தினநாள் வரை பிஜேபியை சகட்டு மேனிக்கு வறுத்தெடுத்தவர் அதிமுகவில் தம்பிதுரை மட்டுமே. அதனால் அவர் ஜெயிக்கக் கூடாது என்று பிஜேபி தலைமை விரும்புவதால்தான் தம்பிதுரையின் நெருக்கமானர்கள் மீது தொடர்ச்சியாக ரைடு நடத்துவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள் தம்பிதுரைக்கு நெருக்கமானவர்கள்.