கடலூர் முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன் தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் திமுகவில் இணைந்தார். 2006-11 திமுக ஆட்சியின்போது கடலூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஐயப்பன். 2011ஆம் ஆண்டு கடலூர் மாவட்ட உட்கட்சி அரசியலால் திமுகவிலிருந்து விலகி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை பெரும் ஆதரவாளர் கூட்டத்துடன் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அதிமுகவின் மாவட்ட அவைத்தலைவரானார்.
அதிமுக பிளவின்போது ஓபிஎஸ் அணியில் இருந்தார் இவர். ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைப்புக்குப் பிறகு ஓபிஎஸ் தனக்கு உறுதுணையாக வந்தவர்களை புறக்கணிப்பதாக செய்திகள் வந்தன. பலரும் இந்தக் குற்றச்சாட்டை எழுப்பினர். ஐயப்பன், திமுகவில் இணைய இதுவும் முக்கிய காரணம் என்கிறார்கள் கடலூர் லோக்கல் அரசியல்வாதிகள்.
மேலும் ஐயப்பனுக்கு கடலூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருக்கும் ஆதரவு அதிமுக அமைச்சர் சம்பத்துக்கு கவலை தந்ததாகவும், அதனால் இவரை கட்சியில் ஓரங்கட்டும் நோக்கில் செயல்பட்டதாகவும் சொல்கிறார்கள் கடலூர் அதிமுகவினர். கலைஞர் ஒருமுறை கடலூர் சென்றபோது ஐயப்பன் இல்லத்தில் தங்கியுள்ளார். அந்த அளவுக்கு கலைஞரின் அன்பை பெற்றிருந்தார் ஐயப்பன்.
11ஆம் தேதி திமுகவில் இவர் இணைவார் என்று செய்தி பரவிய நேரத்தில் கடந்த 9ஆம் தேதி திடீரென கடலூர் தவுலத் நகரில் உள்ள ஐயப்பன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். தேர்தல் பறக்கும் படையினர் அவரது வீட்டுக்கு முன்பு முகாமிட்டிருந்தனர். சுமார் 3 மணி நேரம்நடந்த சோதனையில் பணம், ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை. இது போல சேர்மன் சுந்தரம் நகரில் உள்ள ஐயப்பன் ஆதரவாளர் பிரகாஷ் வீட்டிலும் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த வருமான வரித்துறை சோதனை குறித்து ஐயப்பன் செய்தியாளர்களிடம், “மாவட்ட அமைச்சர் சம்பத்தின் செயல்பாடு பிடிக்காமல் நான் கட்சியை விட்டு விலக முடிவு செய்து மாவட்ட அவைத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அதிமுக தலைமைக்கு கடிதம் அனுப்பினேன். இதனை பொறுக்காத சிலர் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக பொய் தகவலை அளித்து, வருமானவரித் துறையினரை சோதனைசெய்ய வைத்துள்னர். ஆனால், என் வீட்டில் எதுவும் இல்லை என்று சென்றுவிட்டனர்'' என கூறினார்.