நீதிமன்றம் எந்த முடிவை கொடுத்தாலும் தொண்டர்கள் முடிவு எடுத்து விட்டால் அதை மாற்ற முடியாது என எடப்பாடி அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் இருந்தும் 10 முக்கிய பிரச்சனைகளை பட்டியலிட்டு அனுப்புமாறு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்து இருந்தார். இதனை ஏற்று மதுரை மேற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு தனது தொகுதியின் 10 பிரச்சனைகள் அடங்கிய பட்டியலை மதுரை ஆட்சியரிடம் வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவி திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் மற்றும் 50 ஆயிரம் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அதற்கு மூடுவிழா செய்யப்பட்டு புதுமைப்பெண் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எத்தனை நீதிமன்றங்கள் என்ன தீர்ப்பு சொன்னாலும் கழகத்தொண்டர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டால் அதை மாற்ற முடியாது. கட்சியின் முடிவை நீதிமன்றங்கள் தீர்ப்பு சொல்லி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொன்னால் எதிர்காலத்தில் அது எப்படி ஆகும் என தெரியாது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வலுவாக உள்ளது. எத்தனை தீர்ப்புகள் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது" என கூறியுள்ளார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்ததும் அதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனிடையே, எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்ததும் குறிப்பிடத்தக்கது.