சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள காமராஜர் அரங்கில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று (21-09-24) நடைபெற்றது. கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின், 2வது பொதுக்குழு கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியினுடைய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், மாநில செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் தலைவராக கமல்ஹாசன் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில், தேர்தலை எதிர்கொள்ள ஏதுவாக பூத்திற்கு குறைந்தது 5 பேரை நியமிக்க வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்ய புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும், தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை 25இல் இருந்து 21ஆக குறைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.