சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தங்களை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 18 எம்எல்ஏக்கள் வழக்கு தொடர்ந்தனர். இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த 3வது நீதிபதி சத்யநாராயணன், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அதிமுக எம்.எல்.ஏ. செம்மலை,
எங்களுக்கு சாதமான தீர்ப்பு கிடைக்கும் என்று நாங்கள் எப்போதும் சொன்னதில்லை. நாங்கள் சொன்னதெல்லாம் 18 எம்எல்ஏக்கள் வழக்கில் நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்றுதான் சொல்லி வந்தோம். அந்த நியாயமான தீர்ப்பு உயர்நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அவர்கள் மேல்முறையீடு சென்றால்...
உச்சநீதிமன்றம் செல்லப்போவதில்லை. தங்களுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படி உச்சநீதிமன்றம் சென்றால் அவர்களுக்கு நியாயம் கிடைக்காது. ஏற்கனவே பேரவைத் தலைவர் அதிகாரம் குறித்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. அந்த வழக்கோடு இது இணைக்கப்பட்டால் தீர்ப்பு வருவதற்கு ஆண்டுகள் பல ஆகும். அதுவரை இவர்களுடைய கதி என்ன. அப்படி அந்த தவறை அவர்கள் செய்ய மாட்டார்கள் என்று கருதுகிறேன். கண்ணை மூடிக்கொண்டு கிணற்றில் குதிக்கிறேன் என்று சொன்னால் அவர்களுடைய தலைவிதி என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
18 பேரும் தினகரன் பக்கமே இருந்து இடைத்தேர்தலை சந்திக்க தயார் என்றால்...
தாராளமாக சந்திக்கட்டும். எங்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை. இந்த தீர்ப்பை காட்டி காட்டி மக்களை ஏமாற்றிக்கொண்டிருந்தார்கள். இந்த தீர்ப்பை பொறுத்தமட்டில் தினகரனுக்கு மிகப்பெரிய பின்னடைவு. இனிமேல் மக்கள் அவரை நம்ப மாட்டார்கள். அவர் எதிர்பார்த்த செல்வாக்கு மக்களிடமும், தொண்டர்களிடம் கிடைக்காது. அமமுக எதிர்காலத்தில் மெல்ல மெல்ல கரையும்.
தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஒரு சிலரோ, அனைவருமோ அதிமுகவுக்கு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?
சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அவர்கள் கடந்த ஓராண்டு காலமாக எவ்வளவு மன உளைச்சலில் இருப்பார்கள் என்பதை என்னால் உணர முடிகிறது. அவர்களுக்கு சம்பளம் இல்லை, படி இல்லை. நிதி இழப்பு ஏற்படுகிறது. பொதுமக்கள் மத்தியில் எம்எல்ஏவாக செயல்பட முடியவில்லை. அதிகாரிகளிடம் மரியாதை இல்லை. பொதுமக்களிடம் மரியாதை இல்லை. இது அவர்களாகவே ஏற்படுத்திக்கொண்டது. அவர்கள் மனம் திருந்தி வந்தால், எங்கள் தலைமை ஏற்றுக்கொள்ள பரிசீலிக்கும், தலைமை அவர்களை ஏற்றுக்கொண்டால் அவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம். தினகரனை நம்பி ஏமாறப்போகிறார்களா. தவறை உணர்ந்து திருந்த போகிறார்களா என்று பார்ப்போம்.
மறுவாழ்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றால் 18 பேருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா?
அது என்னால் சொல்ல முடியாது. காரணம். தேர்தல் நேரத்தில் தலைமை முடிவு எடுக்க வேண்டியது. அந்த உத்திரவாத்தை கொடுக்க முடியாது. நிபந்தனைகளோடு இணைவதற்கு வருவார்களேயானால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். இவ்வாறு கூறினார்.