காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி இந்தியா முழுவதும் சுமார் 12 மாநிலங்களில் 3,570 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாட இருக்கிறார். இந்த பயணத்திற்கான திட்ட ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு கன்னியாகுமரியிலிருந்து நடைபயணத்தை செப்டம்பர் மாதம் 7ம் தேதி ராகுல் துவங்கினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை வழங்கி துவக்கி வைத்தார். தமிழகத்தில் தன் நடைபயணத்தை முடித்து தற்போது கேரளாவில் தனது நடைபயணத்தை துவங்கியுள்ள ராகுல் காந்திக்கு வழிநெடுகிலும் மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
இந்நிலையில் பாஜகவின் சமூக வலைதளப் பக்கங்களில் ராகுல் காந்தி அணிந்துள்ள டி ஷர்டின் விலை 45 ஆயிரம் என பதிவிடப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பதிவில் ”கூடிய கூட்டத்தை பார்த்து பயந்து விட்டீர்களா? இந்தியாவில் ஏற்பட்டுள்ள வேலை வாய்ப்பின்மையை பற்றியும் பணவீக்கத்தை பற்றியும் பேசுங்கள். அதை விடுத்து துணிகளை பற்றி பேசினால் மோடிஜியின் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான உடையும் 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான கண்ணாடியும் பேச்சு பொருளாகும்” என குறிப்பிட்டு இருந்தது.
தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கழுத்தில் அணிந்துள்ள சால்வையின் மதிப்பு 80000 ரூபாய் என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் விமர்சித்துள்ளார்.
பாஜக தலைவர்கள் அணிந்துள்ள கண்ணாடியின் விலை இரண்டரை லட்சம் என்று கூறிய அவர் காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜூடோ யாத்திரைக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால் பாஜகவினர் தொடர்ந்து விமர்சிப்பதாக கூறினார்.