பாஜகவின் மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு மக்களவை தேர்தலில் தற்போது வரை எந்த தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. இது பாஜக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் சர்ச்சைகளையும் எழுப்பியது.
அத்வானி கடந்த காலங்களில் போட்டியிட்ட காந்தி நகர் தொகுதியில் அமித்ஷா போட்டியிடுகிறார். அதுபோல முரளி மனோகர் ஜோஷியின் கான்பூர் தொகுதியில் ராம்கோபால் போட்டியிடுகிறார். வேட்பாளர்களாக அறிவிக்கப்படாத நிலையில் பிரச்சாரம் செய்யும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலிலும் அவர்கள் பெயர் இடம்பெறவில்லை.
இந்நிலையில் இதுகுறித்து முரளி மனோகர் ஜோஷி அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், "பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் ராம்கோபால் என்னிடம் கான்பூர் அல்லது வேறு எந்த தொகுதியிலும் போட்டியிட வேண்டாம் என்று என்னை கேட்டுக்கொண்டார்” என்று தெரிவித்துள்ளார். பாஜக தரப்பில், இவர்கள் இருவருக்கும் வயது மூப்பு காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.