உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 14 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 140-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 5000க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் உணவுக்காகவும், பொருளாதார தேவைகளுக்காகவும் கஷ்டப்பட்டு வரும் நிலையில், சிலர் தேவையில்லாத விபரீத வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மது நோயாளிகள் ஷேவிங் லோஷனை, குளிர்பானத்துடன் சேர்த்து குடித்து சில நாட்களுக்கு முன்பு மரணமடைந்த நிலையில், ஆந்திர மாநிலம், சித்தூரில் கரோனாவுக்கு தடுப்பு மருத்து என்று ஊமத்தம் பூவை அரைத்து குடித்த 8 பேர் கவலைக்கிடமான முறையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கரோனா தொற்று ஒருபுறம் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சிலரின் விபரீத முயற்சி மேலும் சிக்கலை ஏற்படுத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளார்கள்.