இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை, நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதோடு, கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்லி போன்ற மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் டெல்லியில் உள்ள மருத்துவமனை, தங்களுக்கு ஆக்சிஜன் வழங்கவேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை நேற்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், அரசாங்கம் யதார்த்தத்தைப் பார்ப்பது போல் தெரியவில்லை என்று நாங்கள் அதிர்ச்சியும் கலக்கமும் அடைகிறோம். என்ன நடக்கிறது? அரசாங்கம் ஏன் யதார்த்தத்தை உணரவில்லை. நோயாளிகளுக்குத் மருத்துவ வசதிகளைச் செய்து தருவது அரசின் அடிப்படைக் கடமை. அதனை மத்திய அரசு சரிவர செய்ய வேண்டும். திருடுங்கள், பிச்சை எடுங்கள், கடன் வாங்குங்கள் அல்லது பணம் கொடுத்து எதையாவது செய்யுங்கள். ஆனால், ஆக்சிஜனை விநியோகியுங்கள். ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் இறப்பதைப் பார்க்கமுடியாது என மத்திய அரசை கடுமையாகச் சாடியது.
சில தொழிற்சாலைகளில் ஆக்சிஜன் பயன்பாட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்த உயர் நீதிமன்றம், ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் போகும்போது நீங்கள் தொழிற்சாலைகளைப் பற்றி கவலைப்படுகிறீர்கள் எனக் கண்டனம் தெரிவித்தது. விசாரணையை ஒருநாள் ஒத்திவைக்க மத்திய அரசு கோரிக்கை விடுத்தபோது, இன்று இரவு ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழப்பு ஏற்பட்டால் அதற்கு நீங்கள் பொறுப்பு ஏற்பீர்களா எனவும் டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இந்தநிலையில் ஆக்சிஜன் பாற்றாக்குறை குறித்து அனைத்து வழக்குகளையும் தாங்களாக முன்வந்து விசாரிக்கப்போவதாக உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்தது. இந்தநிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி உயர்நீதிமன்றம், இது மிகவும் அத்தியாவசியமான வழக்கு என்பதால், விசாரிப்பதை நிறுத்த முடியாது. உச்சநீதிமன்றம் தடை விதிக்கும்வரை வழக்கை தொடர்ந்து விசாரிப்போம் எனக் கூறியுள்ளது.