உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஆஷிஸ் மிஸ்ரா, விவசாயி ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் உட்பட மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
இந்த வன்முறை தொடர்பாக ஆஷிஸ் மிஸ்ரா மற்றும் அவரது ஆதரவாளர்கள் என 14 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில், இன்று (07.10.2021) லக்கிம்பூர் வன்முறை தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வன்முறை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் யார்? யார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது? யார் யார் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பன குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரப்பிரதேச அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக ஆஷிஸ் மிஸ்ராவின் ஆதரவாளர்களான லுவ்குஷ் ராணா, ஆஷிஷ் பாண்டே ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விவசாயிகள் மீது ஏறிய காரில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களை தேடும் பணிகள் நடந்துவருவதாக உத்தரப்பிரதேச காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், மத்திய இணையமைச்சரின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா தற்போது எங்கு இருக்கிறார் என தெரியவில்லை எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.