Skip to main content

தாது மணல் கொள்ளை வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 17/02/2025 | Edited on 17/02/2025

 

Ore and sand theft case; High Court delivers dramatic verdict

தமிழகத்தில் தாது மணல் அள்ளுவதற்கும், ஏற்றுமதி செய்வதற்கும் கடந்த 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாகக் கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து 2016 ஆம் ஆண்டு  இந்த வழக்கைத் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அதன்படி 2016ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஜோதி ராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

நீதிமன்றத்தில், தமிழக அரசின் தொழில்துறை சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், “இதில் சம்பந்தப்பட்ட 7 நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டதில் சட்டவிரோதமாகத் தாது மணல் எடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக 2013ஆம் ஆண்டு தமிழகத்தில் தாது மணல் அள்ளுவதற்கும், ஏற்றுமதி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. தாது மணல் எடுத்ததில் 5 ஆயிரத்து 832 கோடியே 44 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று (17.02.2025) தீர்ப்பு அளித்துள்ளனர். அதில், “இது தொடர்பான அனைத்து வழக்குகளும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட சிறப்பு அறிக்கை, சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதன் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மோனோசைட் தாது பிரித்தெடுக்கப்படுவது தொடர்பாக அரசு விசாரணை நடத்த வேண்டும். ஏற்கனவே தனியார் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதங்கள் செல்லுபடி ஆகும். தாது மணல் தொடர்பாக ககன்தீப்சிங் பேடி, சத்திய பிரதசாகு ஆகியோர் அளித்த அறிக்கை செல்லும்.  நீதிமன்றத்திற்கு உதவியாக அமைக்கப்பட்ட வழக்கறிஞர்  தொடர்பாக சுரேஷ் தாக்கல் செய்த 5 அறிக்கைகளின் முடிவுகளும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

சட்டவிரோதமாக எடுக்கப்பட்டுப் பதுக்கி வைக்கப்பட்டுள்ள தாது மணலை உடனடியாக மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த வழக்கில் அரசு அதிகாரிகளின் பங்கு குறித்தும் சிபிஐ விசாரிக்க வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக மாநில போலீசார் பதிவு செய்த அனைத்து வழக்குகளும் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுகிறது. எனவே 4 வாரங்களில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ.க்கு தமிழக போலீசார் வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களின் வரவு செலவு கணக்குகளை அமலாக்கத்துறை, வருமான வரித்துறையினர் விரிவான விசாரணை நடத்த வேண்டும்” என அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்