Skip to main content

காதல் திருமணம்; 3 ஆண்டுகள் கழித்து மகளின் குடும்பத்தைச் சுட்டுக் கொன்ற குடும்பத்தினர்!

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
After 3 years, the family incident the daughter's family for love marriage

பீகார் மாநிலம், பகல்பூர் மாவட்டத்தில் உள்ள நவ்டோலியா பகுதியைச் சேர்ந்தவர் பப்பு சிங். இவருக்குத் திருமணமாகி, திராஜ் சிங் என்ற மகனும், சாந்தினி குமாரி (23) என்ற மகளும் இருந்தனர். இந்த நிலையில், சாந்தினி குமாரி அதே பகுதியைச் சேர்ந்த சந்தன்குமார் (40) என்பவரிடம் பழகி வந்துள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் சாந்தினி குமாரி குடும்பத்தினருக்கு தெரியவந்தது. மேலும், இந்த காதலுக்கு சாந்தினி குமாரியின் தந்தை பப்பு சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால், பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சாந்தினி குமாரி வீட்டை விட்டு வெளியேறி சாந்தன்குமாரை திருமணம் செய்துள்ளார். இதையடுத்து, அந்த தம்பதியினர், தங்களது 2 வயது மகளுடன் வெளியூரில் வசித்து வந்தனர். இந்நிலையில், தனது பெற்றோரை பார்ப்பதற்காக சந்தன்குமாரும், சாந்தினி குமாரியும் தங்கள் குழந்தையுடன் நேற்று (10-01-24) மாலை நவ்டொலியா கிராமத்திற்கு வந்துள்ளனர். 

காதல் திருமணம் செய்துகொண்ட தன் மகள், அவரது கணவர் மற்றும் மகளுடன் ஊருக்குள் வந்ததை கண்ட சாந்தினி குமாரியின் தந்தை பப்பு சிங், அவர்கள் 3 பேரையும் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன் பின்னர், ஆத்திரம் அடங்காத பப்பு சிங்,  தான் வைத்திருந்த இரும்பு கம்பியால் தனது மகள், மருமகன் மற்றும் பேத்தி ஆகிய 3 பேரையும் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அந்த 3 பேரும் மயங்கி விழுந்தனர். 

இதனையடுத்து, அங்கு வந்த சகோதரர் திராஜ் சிங், தான் வைத்திருந்த துப்பாக்கியால் சகோதரி சாந்தினி குமாரி அவரது கணவர் சாந்தன் குமார் மற்றும் மகள் மீது சரமாரியாகச் சுட்டார். இதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, பப்பு சிங் மற்றும் மகன் திராஜ் சிங்கும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து, தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து உயிரிழந்த 3 பேரின் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாகியிருக்கின்ற 2 பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்