![Union Minister murugan says Thiruparankundram belongs to Lord Murugan](http://image.nakkheeran.in/cdn/farfuture/07j0sW-qovriZMzLb2fab4QqbdyZpeNGWrJtz9kJMYQ/1739775565/sites/default/files/inline-images/thiruparankuntam-art.jpg)
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் காசிவிஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. இந்த 2 புனிதத் தலங்களிலும் ஏராளமான பக்தர்கள் தினமும் வழிபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான், சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளைப் பலியிடப்பட்டு விழா நடத்தப்படும் எனத் தர்கா நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்கு இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதே சமயம் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி திருப்பரங்குன்றத்துக்கு வந்த போது மலையில் அமர்ந்தபடி சிலர் அசைவ உணவுகளைச் சாப்பிட்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பரவின. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதையடுத்து, மலையின் புனிதம் கெட்டுவிட்டதாகக் கூறி கடந்த 4ஆம் தேதி (04.02.2025) போராட்டம் நடத்த உள்ளதாக இந்து அமைப்பினர் அறிவித்ததிருந்தனர். இந்த போராட்டத்திற்கு, காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. இத்தகைய சூழலில் தான் மதுரை மாவட்ட ஆட்சியர், 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனால் தடையை மீறி வெளி மாவட்டங்களில் இருந்து வந்த இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் தனியார் மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே போராட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என இந்து அமைப்பினர் சார்பில் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் முறையிடப்பட்டது.
இந்த வழக்கில் மாலை 5 மணியிலிருந்து 6 மணி வரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனையடுத்து பல்வேறு பகுதிகளில் மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் விடுவிக்கப்பட்டு பழங்காநத்தம் பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். உள்ளூர்ப் பகுதி மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடவில்லை என்றாலும் பல்வேறு பகுதிகளில் இருந்து அங்கு வந்திருந்த இந்து அமைப்பினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று (17.02.2025) சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கே சொந்தமானது என நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. எனவே திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அறநிலையத்துறையினர் முன்வர வேண்டும். திருப்பரங்குன்றம் சைவத் திருத்தலம் ஆகும். வைணவ சைவத் திருத்தலங்களில் பலியிடும் சம்பவங்கள் கிடையாது.
![Union Minister murugan says Thiruparankundram belongs to Lord Murugan](http://image.nakkheeran.in/cdn/farfuture/m6k51oQFFwR7d1DQA2RZlmotMWulnU9ZsnMaI985LP8/1739775595/sites/default/files/inline-images/l-murugan-pm-art.jpg)
தமிழ் மிக முக்கியமான மொழி, மிகப் பழமையான மொழி, மிகத் தொன்மையான மொழி எனப் பிரதமர் நரேந்திர மோடி உலக அரங்கில் சொல்லிக் கொண்டு வருகிறார். யாவரும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று ஐநா சபையில் போற்றினார். தமிழுக்கு மரியாதை கொடுக்கும் விதமாகக் கடந்த 3 வருடங்களாகக் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் (15.02.2025) காசி தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்தயநாத் தொடங்கி வைத்தார். வரும் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ் மீதும், தமிழ் மொழிக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும், தமிழ்க் கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது பா.ஜ.க.
ஜல்லிக்கட்டை ஒழித்து ஜல்லிக்கட்டு நடக்கக் கூடாது என்று அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியும் அந்த அரசில் அங்கம் திமுகவும் ஜல்லிக்கட்டை நடத்த விடாமல் செய்தார்கள். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி இதில் தலையிட்டு ஜல்லிக்கட்டு தமிழர்களின் உரிமை. ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டு. ஜல்லிக்கட்டை அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டின் மேல் தமிழ் மக்களின் மேல் தமிழ்ப் பண்பாட்டின் மேல் அதிக பிரியம் கொண்டுள்ளது பாஜக” எனப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள காசிவிஸ்வநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சென்றார். அப்போது அவருடன் 5 பேருக்கு மட்டுமே காவல்துறை அனுமதி வழங்கியது. அதே சமயம் மத்திய இணையமைச்சர் எல். முருகனுடன் மலைக்குச் செல்ல முயன்ற பாஜகவினர் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.