
டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (17.02.2025) அதிகாலை 05:36 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் வீடுகள் குலுங்கியதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆகப் பதிவாகியுள்ளது எனத் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் (National Center for Seismology) தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று இரவே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக மக்கள் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலநடுக்கம் தொடர்பாக புது டெல்லி ரயில் நிலையத்தில் ரயிலுக்காகக் காத்திருந்த பயணி ஒருவர் கூறுகையில், “நான் ரயிலுக்கான ரயில் நிலையத்தின் காத்திருப்பு அறையில் இருந்தேன். அனைவரும் அங்கிருந்தவர்கள் விரைந்து ஓடினர். ஏதோ பாலம் இடிந்து விழுந்தது போல் உணர்ந்தேன்”என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “டெல்லி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அனைவரும் பதற்றம் அடையாமல் அமைதியாக இருக்கவும். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும். அதே சமயம் எச்சரிக்கையாக இருக்கவும் கேட்டுக்கொள்கிறேன். அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.