Skip to main content

நிறைவடைந்த காசி தமிழ் சங்கமம்; தமிழே உலகின் முதல்மொழி என அமித்ஷா பேச்சு

Published on 17/12/2022 | Edited on 17/12/2022

 

Completed Kasi Tamil Sangam; Amit Shah said that Tamil is the first language of the world

 

உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நவம்பர் மாதம் 19 ஆம் தேதி காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். காசி மற்றும் தமிழகம் இடையேயான பழமையான தொடர்பைக் கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டது.

 

துவக்க விழாவில் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பா.ஜ.க.வின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், இசையமைப்பாளர் இளையராஜா எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

துவக்க விழா நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் இளையராஜா எம்.பி., "காசியில் நடைபெற்று வரும் தமிழ் சங்கமம் விழாவை எண்ணி வியந்து மகிழ்கிறேன். வாரணாசியில் பாரதியார் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தார். காசியில் தமிழ் சங்கமம் நடைபெற யோசனை செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி"  என்றார். அதைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் அவரது குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, "நான் கடவுள்" திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஹர ஹர மகாதேவ்’ பாடலை பிரதமர் ரசித்துக் கேட்டார்.

 

நிகழ்ச்சியில், "வணக்கம் காசி, வணக்கம் தமிழ்நாடு" என்று கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, "காசியும், தமிழ்நாடும் கலாச்சாரத்தில் சிறந்து விளங்குகிறது. காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் நீண்ட பந்தம் உள்ளது. காசியை வளர்த்ததில் தமிழர்களின் பங்கு அதிகமாக உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு இந்தச் சங்கமமே சாட்சி. காசிக்கு துளசிதாசர் என்றால், தமிழகத்திற்கு திருவள்ளுவர்" என்றார். 

 

இந்நிலையில்,  நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. அதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய கல்வித்துறை அமைச்சர், கலாச்சாரத் துறை அமைச்சர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உத்தரப்பிரதேச முதல்வர் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.  

 

விழாவில் பேசிய அமித்ஷா உலகின் முதல்மொழி தமிழ் என்பதை வாரணாசி மட்டுமல்லாது வடஇந்தியாவின் பல்வேறு பகுதி மக்களும் தெரிந்து கொண்டனர் என்றார். தமிழக ஆளுநர் ரவி தனது உரையைத் தமிழில் துவங்கினார். காசி தமிழ் சங்க நிறைவு விழாவை சென்னை ஐஐடி மற்றும் வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்து ஏற்பாடுகளைச் செய்தன.

 

 

சார்ந்த செய்திகள்